இரண்டாண்டு கால திமுக ஆட்சியில் அமைச்சர்கள் ஊழல் செய்திருப்பதால் அச்சத்தில் உள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 29) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பின் முப்பெரும் விழா கோவையில் நேற்று (நவம்பர் 28) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு ’சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்’ என்ற விருது வழங்கப்பட்டது.
கோவையிலிருந்து இன்று சேலம் வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“தமிழகத்தில் அதிகளவில் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது தான் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் வாடிக்கையாகிவிட்டது. திறமையில்லாத முதிர்ச்சியில்லாத ஒருவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருப்பது வேதனையாக உள்ளது.
நகர பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் பல்வேறு விளக்கங்களை கேட்கிறார்கள். குறிப்பாக சாதி மற்றும் தொலைபேசி எண்ணை கேட்கிறார்கள். அது மிகவும் கண்டிக்கத்தக்கது. அனைத்து நகர பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்துவிட்டு பிங்க் நிற பேருந்துகளில் மட்டுமே இலவச பயணம் செய்ய அனுமதித்துள்ளனர். இது திராவிட மாடல் ஆட்சியல்ல, தந்திர மாடல் ஆட்சி.
பொங்கல் தொகுப்பில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக நாங்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இனி பொங்கல் தொகுப்பு கொடுக்கும் போது முறையான பொங்கல் தொகுப்பை கொடுக்க வேண்டும்.
குறுவை சாகுபடி பயிருக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு வரும்போது நான் டெல்டா காரன் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியபடி டெல்டா விவசாயிகளுக்கு உரிய தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள், 1.5 லட்சம் ஏக்கர் மட்டும் தான் விளைச்சல் பெற முடிந்தது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வர் ஸ்டாலின் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் பெற்று தர தவறவிட்டுவிட்டார்.
குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இதனால் கருகிய பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்காமல் போய்விட்டது.
நெடுஞ்சாலை துறை பணியின் மொத்த மதிப்பே 4,800 கோடி தான். டெண்டரே நடக்காத பணியில் எப்படி ஊழல் நடக்கும். இப்படிப்பட்ட விசித்திரமான புகாரை என் மீது கொடுத்தார்கள்.
திமுக அமைச்சர்கள் தினமும் காய்சலோடு தான் எழுந்திருக்கிறார்கள். இரண்டாண்டு கால திமுக ஆட்சியில் ஊழல் செய்திருக்கிறார்கள். இதனால் அச்சத்தில் உள்ளனர். இதனை முன்னாள் நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அதனை கூட இன்னும் முழுமையாக விசாரிக்கவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுரங்க விபத்து: மீட்பு பணியில் கைகொடுத்த திருச்செங்கோடு ரிக் இயந்திரம்!
ஒரே நாளில் ரூ.720 உயர்வு: 47 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!