எம்.ஆர்.விஜயபாஸ்கரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக செயல்பட்டு வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 7) குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,
“அண்மைக்காலமாக தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், சேலம் அதிமுக பகுதி செயலாளர் சண்முகம், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சூழல் தான் நிலவுகிறது.
அண்ணாமலை பச்சோந்தி மாதிரி அவ்வப்போது கலர் மாறுவார். என்னை பார்த்து துரோகி என்று சொல்லியிருக்கிறார். துரோகியின் மொத்த உருவமே அவர் தான்.
எங்களின் தலைவர் அண்ணாவை விமர்சித்தால் நாங்கள் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். இவர் கட்சி பொறுப்புக்கே தகுதியில்லாதவர்.
நாங்கள் 50 ஆண்டுகாலம் உழைத்து தான் இந்த பதவிக்கு வந்துள்ளோம். அவரை போல அப்பாயின்ட்மென்ட் பதவியில் வரவில்லை. அவர் அனுபவம் இல்லாத ஒரு தலைவர். அரசியல் தலைவராக அவர் முதலில் பேச கற்றுக்கொள்ள வேண்டும்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது இருப்பது ஒரு சிவில் வழக்கு. அவரை 100 போலீசாரை வைத்து தேடிவருகிறார்கள். நாட்டில் எவ்வளவு கொலை, கொள்ளை நடக்கிறது. இதற்கெல்லாம் பாதுகாப்பு கொடுத்தால், இதுபோன்ற சம்பவங்களே நடைபெறாது.
ஆனால், செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால், அதிமுகவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது திமுக. காலசக்கரம் சுழலும். இதே நிலை அவர்களுக்கும் வரும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டைட்டானிக், அவதார் பட தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் காலமானார்!
ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி!