எடப்பாடி, சசிகலா, தினகரன் : அனைவரும் ஒன்றிணைவோம் – பன்னீர்

அரசியல்

அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுத்தார். அதுபோன்று சசிகலாவும், தினகரனும் இணைவார்கள் என்றும் கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவித்தது. இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், இனி இருதரப்பெல்லாம் கிடையாது ஒரே தரப்புதான்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், “தொண்டர்களுக்கான இயக்கமாக அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பின்னர் கழகத்தின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று 30 ஆண்டுகள் பணியாற்றினார் ஜெயலலிதா. எதிர்க்கட்சிகளின் சதிவேலைகளை முறியடித்து 17 லட்சமாக இருந்த தொண்டர்களை ஒன்றரை கோடியாக உயர்த்தினார்” என்றார்.

ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களைக் கொண்டு வந்தார் என்று கூறிய பன்னீர் செல்வம், “அதிமுகவுக்குள் சில சில பிரச்சினைகளால், பிளவு ஏற்பட்டு எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட சூழ்நிலையில் தான் திமுக ஆளுங்கட்சியாக வரக்கூடிய நிலை ஏற்பட்டது.

நாங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்துத் தந்த பாதையில் இன்றைக்கும் சென்று கொண்டிருக்கிறோம்.

சமீபத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சினைகளால் இன்றைக்கு அதிமுகவுக்குள் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் எங்கள் மனதிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு கட்சி ஒன்றுபட வேண்டும் என்பதற்காகவும், அதிமுக தமிழகத்தை ஆள வேண்டும் என்பதற்காகவும், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது உறுதியான நிலைப்பாடு.

கசப்புகளை தூக்கி எறிந்துவிட்டோம்

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அது எங்களுக்குப் பாதிப்பாக இருந்தது என எந்த காலத்திலும் சொல்லமாட்டேன். எங்களுக்குள் பிரச்சினை இருந்தது. ஆனால், அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும், மக்களும் இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்று கருதுகிறார்கள். எனவே முன்னதாக ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும் மனதில் வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு கட்சியின் ஒற்றுமையே பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றியதன் காரணமாக அதிமுக உருவானது. திமுக, அதிமுக என்று வரும் போது, அதிமுகதான் அதிகம் வெற்றிபெற்றுள்ளது. மக்கள் விரோத போக்கை திமுக கையில் எடுக்கின்ற போது அதை எதிர்த்து முதலில் குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கும்.

எங்களோடு 50ஆண்டுக் காலம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிள்ளைகளாக விளங்கிக்கொண்டிருக்கும் அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்.

ஜெயலலிதா காலமான பிறகு அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அவரோடு முழு ஒத்துழைப்போடு அனைவரும் பயணித்திருக்கிறோம். கழகத்தின் ஒற்றுமைக்காக பல்வேறு ஜனநாயக கடைமையை ஆற்றியிருக்கிறோம். அந்த நிலை மீண்டும் வரவேண்டும் என்பதுதான் எங்களது தலையாய எண்ணம், கொள்கை.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தர்மயுத்தம் தொடங்கப்பட்டு, அதன்பிறகு உயர்மட்ட தலைவர்கள், தொண்டர்கள் எண்ணப்படி கூட்டுத் தலைமை உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இருவரும் சிறப்பாக சட்ட விதிப்படி எங்களுடைய பணிகளை ஆற்றினோம். இதில் எந்தவித குறைபாடும் எங்களிடமும் இல்லை, அவர்களிடமும் இல்லை என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கழகத்தை நடத்திக் கொண்டிருப்பவர், தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி. இந்த விதியை மாற்றவோ திருத்தம் செய்யவோ கூடாது என்பதுதான் எங்களுக்குள் வகுத்துக்கொண்டோம்.

அதன்படிதான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. நாங்கள் இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டுத்தான் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம்.

நாங்கள் பொறுப்பாளர்களாக இருந்து உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி நடைபெற்றது. புதிதாக உறுப்பினர்களைச் சேர்ப்பதும், ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்தவர்களை புதுப்பிக்கின்ற பணியும் நடந்து முடிந்தது.

அதற்குப் பின் கழக சட்ட விதிப்படி, அடிப்படை உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். முறைப்படி இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலின் படி கிளைக் கழகத்திலிருந்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டுகளுக்கு அமைப்பு ரீதியாகத் தேர்தல் நடத்தப்பட்டது. ஆக சட்ட விதிப்படிதான் அடிப்படை உறுப்பினர்களால் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டோம்” என்றார்.

பன்னீர் செல்வம் பேசிக் கொண்டிருக்கும் போதே, அதிமுக பொதுக்குழு தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் என்று செய்தி வெளியானது.
சசிகலாவும் தினகரனும்

இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த பன்னீர் செல்வம், “நாங்கள் இந்த அறைகூவல் விடுப்பதின் நோக்கமே தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என எதுவும் கிடையாது. இதற்கு முன்னதாக நடந்தது நடந்தவை என தூக்கி எறிந்துவிட்டோம். அவை தொலைந்தே போகட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்றார்.

சசிகலா, டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு, “ எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இந்த கட்சி வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களை இணைத்துக்கொண்டு கழகம் வெற்றிநடை போட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைபாடு” என கூறினார். இறுதியாகச் சின்னம்மாவும் இருக்கிறார்கள், டிடிவி தினகரனும் இருக்கிறார்கள் என்று தெரிவித்த பன்னீர் செல்வம், அனைவரும் ஒற்றுமையாக இணைவோம் என்று கூறினார்.

பிரியா

தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை: எடப்பாடி தரப்பு விளக்கம்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.