”கள்ளச்சாராய மரணங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 130க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 20) நேரில் சந்தித்து விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
காவல்நிலையம் அருகில் கள்ளச்சாராயம் விற்பனை!
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்துள்ளனர். இது வேதனையளிக்கிறது. உயிரிழந்த அனைவருமே ஏழைகள்.
கள்ளச்சாராயம் விற்றவர்களுக்கு ஆளும் கட்சியை சேர்ந்தவர்களின் ஆதரவு என்று தகவல் வந்துள்ளது.
கள்ளச்சாராயம் விற்ற இடத்தின் அருகே காவல்நிலையம், நீதிமன்றம் உள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல் நிலையம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்றால் அவர்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும்?
கள்ளச்சாராய விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்து வருவது குறித்து கடந்த ஆண்டே கண்டனம் தெரிவித்தேன். ஆனால் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முதல்வர் ஸ்டாலின் எந்த உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் அதனை அரசு கண்டுகொள்ளவில்லை.
மேலும் கள்ளச்சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில், அவர்களின் உயிரைக் காக்க உதவும் Omeprazole மருந்து மருத்துவமனைகளில் இருப்பில் இல்லை.
எனவே கள்ளச்சாராய விற்பனைக்கும், அப்பாவி ஏழைகளின் உயிரிழப்புக்கும் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
கள்ளச் சாராயம் விற்பவர்களை தமிழ்நாடு அரசு இரும்புக் கரம் கொண்டும் ஒடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுக ஏற்கும்!
தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பெற்றோர்களை இழந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுக ஏற்றுக்கொள்கிறது. அந்த குடும்பத்திற்கு 10 ஆண்டுகளுக்கு அதிமுக சார்பில் மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”என்னை விமர்சித்தவர்களுக்கு ‘மகாராஜா’ பதில் கொடுத்துவிட்டது” : விஜய் சேதுபதி
கள்ளச்சாராய மரணம் : ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் உத்தரவு!