மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும்… பிரதமர் மோடியின் சென்னை விசிட் பற்றிய தகவல்களும் சென்னை விசிட்டில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை மோடி சந்திப்பது பற்றிய தகவல்களும் பல ரூபங்களில் வந்து விழுந்தன.
அவற்றை எல்லாம் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“கடந்த வாரம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கே பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அவர்களது அப்பாயிண்ட்மெண்ட் அப்போதைக்கு கிடைக்காததால் தனது பயணத்தை திட்டமிட்டதை விட முன்பாகவே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு நிச்சயமாக இருக்கிறது என்று பலதரப்பினரும் கூறிவரும் நிலையில் டெல்லி சென்று வந்த பிறகு எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஓ பன்னீர்செல்வம் தனது இயல்புக்கு மாறாக இந்த முறை அடுத்தடுத்து புதிய நிர்வாகிகளை தொடர்ந்து அறிவித்து வருகிறார். மாவட்டச் செயலாளர்களை தொடர்ந்து நியமித்து வரும் பன்னீர்செல்வம் அவர்கள் மூலம் ஒன்றிய செயலாளர்களையும் நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்து அகற்றப்பட்ட தொகுதி செயலாளர் பதவிகளையும் ஊராட்சி செயலாளர் பதவிகளையும் மீண்டும் உண்டாக்கி தனக்கென ஒரு நிர்வாகிகள் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார் பன்னீர்செல்வம். இதன் மூலம் ஒரு போட்டி பொதுக்குழுவை விவரங்களை விரைவில் நடத்தி எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திடம் எப்படி பொதுக்குழு விவரங்களை சமர்ப்பித்தாரோ அதேபோல தானும் ஒரு பொதுக்குழுவை கூட்டி அதன் தீர்மானங்கள், பங்கெடுத்த நிர்வாகிகள் விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க இருக்கிறார்.

இதை வைத்துக்கொண்டு தேர்தல் ஆணையத்தை கையில் வைத்திருக்கும் பாஜக இரண்டு தரப்பையும் தன் பிடிக்குள் கொண்டு வர முயற்சி எடுக்கப் பார்க்கிறது. இதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிடைத்திருக்கும் தகவல்.
டெல்லி விசிட்டுக்கு முன்னும் பின்னும் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியமான ஆலோசனைகளை நடத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி, அவரது சட்ட ஆலோசனைகளில் ஜெயலலிதாவுக்கு ஒரு கட்டத்தில் வழக்கறிஞராகவும் ஆலோசகராகவும் இருந்த ஜோதி, முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், இன்பதுரை ஆகியோர் முக்கிய பங்காற்றுகிறார்கள்.

ஒருவேளை ஓ. பன்னீர்செல்வம் போட்டி பொதுக்குழு நடத்தி அந்த விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம் அரசியல் ரீதியாக ஒரு தெளிவான முடிவெடுக்க தயாராகி வருகிறார் எடப்பாடி.
அதாவது அதிமுகவில் ஒற்றை தலைமை என யார் உருவானாலும் அதை பாஜக விரும்பவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஒற்றைத் தலைமையாக உருவெடுத்தபோது பன்னீர் செல்வத்தின் தர்மயுத்தம் மூலம் அதிமுகவை நிலைகுலைய வைத்தது பாஜக.

தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஒற்றை தலைமையில் அதிமுக வருவதை உணர்ந்து மீண்டும் பன்னீர்செல்வம் மூலம் அதே மாதிரியான காய் நகர்த்தல்களை கையாள பாஜக நினைக்கிறது.
‘பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுகவுக்கு இழப்பு தானே தவிர எந்த நன்மையும் இல்லை. குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு முழுமையாக சென்று விடுகின்றன. அதே நேரம் பாஜக கூட்டணி இல்லையென்றால் முஸ்லிம், கிறிஸ்தவ வாக்குகளில் கணிசமானவற்றை அதிமுக பிரிக்க முடியும். மேலும் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவதால் அதிமுகவின் பாரம்பரியமான வாக்குகளில் எந்த பிரச்சனையும் இல்லை. இரட்டை இலைக்கான வாக்குகள் தொடர்ந்து இரட்டை இலைக்கு தான் விழும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த பாஜக கடுமையாக முயற்சி செய்து வருகிறது. மேலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிக்கு அதிக இடங்கள் வேண்டும் என்ற அடிப்படையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பாஜக கேட்கக்கூடும்.
இந்த நிலையில் ரெய்டு, வழக்கு ஆகியவற்றை வைத்து கூட்டணியை நாம் முடிவு செய்யக்கூடாது. இத்தனை வருடமாக பாஜக கூட்டணியில் நாம் இருந்த போதும் அவர்கள் ரெய்டுகள் நடத்தவில்லையா? இப்போது வரை ரெய்டுகள் நடத்திக் கொண்டு தானே இருக்கிறார்கள்? நாம் கூட்டணியில் இருப்பதற்கு என்ன அர்த்தம்?
எனவே ஜெயலலிதா பாணியில் மோடியுடன் நட்பு உண்டு, ஆனால் தமிழகத்தில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை நாம் எடுக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டை எடுத்தால் பன்னீர்செல்வம் அம்பலப்பட்டு போய்விடுவார். அதிமுக இன்னமும் முழுமையாக நமது கைக்குள் வந்து சேரும்.

மோடியை எதிர்ப்பதற்கு தன்னை விட்டால் வேறு ஆள் இல்லை என்று ஸ்டாலின் தமிழகத்தில் ஒரு மாயையை ஏற்படுத்தி வருகிறார். அதை உடைத்து அதிமுகவும் பாஜகவை எதிர்த்து புதிதாக ஒரு அணியை கட்டுவோம். அந்த அணியில் இப்போது திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகள் கூட வரக்கூடும்.
சென்னை வரும் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக எடப்பாடி பழனிசாமி சந்தித்தாலும் சந்திக்காவிட்டாலும் பாஜகவை பொறுத்தவரை எடப்பாடியின் அணுகுமுறை இந்த திசையை நோக்கித்தான் செல்கிறது என்கிறார்கள் எடப்பாடியைச் சுற்றி உள்ளவர்கள்.

பாஜகவை எதிர்த்தால் தன் மேல் உள்ள வழக்குகள் மூலம் தன்னை சிறைக்கு அனுப்ப முயற்சித்தாலும் அதை அடிப்படையாக வைத்து தன்னையும் கட்சியையும் வளர்ப்பது என்ற எண்ணத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்து விட்டார் என்பதுதான் எடப்பாடி வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் லேட்டஸ்ட் தகவல். இந்த நிலைப்பாட்டில் எடப்பாடி உறுதியாக இருப்பாரா? உறுதியாக இருப்பதற்கான வாய்ப்பை டெல்லி அனுமதிக்குமா” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
உங்களுக்கு பதவி, அதிகாரம் தேவைக்கு சிறுபான்மை மக்கள் ஆதரவு தேவை இவனுகளால் மக்கள் பட்ட கஷ்டம் போதாதா… ஏண்டா CA க்கு ஆதரவு கொடுத்து நாடே போர்க்களமா மாறியது… மறக்க முடியுமா…களவாணி கூட்டம்.