எடப்பாடிக்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அரசியல்

வேட்பு மனுவில் சொத்துவிவரங்கள் குறித்து தவறான தகவல் அளித்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 6) நடைபெற உள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் குறித்து தவறான தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்ததாகத் தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இந்த வழக்கில் கடந்த மாதம் 26-ந் தேதி விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், “தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரும் அல்ல; எதிர்த்துப் போட்டியிட்டவரும் அல்ல. எந்த ஒரு தவறான தகவலும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட இல்லை. ஆகையால் சேலம் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு” என தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இவ்வழக்கில் காவல்துறை தரப்பில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் எடப்பாடி தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. முன்னரே கூறியபடி புகாருக்கான ஆதாரத்துடன் காவல்துறையும், புகார்தாரரான மிலானியும் ஆஜர் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கின் முடிவில் சேலம் நீதிமன்றம் நடத்தும் எடப்பாடி வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுமா? இல்லையா என்பது தெரியவரும் என்பதால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஒடிசாவில் கேட்பாரற்று கிடக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள்!

ஐபோன்: இந்தியாவில் கூடுதல் விற்பனை நிலையங்கள்… என்ன காரணம்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *