மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறுத்தினால் சும்மா விடமாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று (ஏப்ரல் 3) எடப்பாடி அருகே வீரப்பம்பாளையத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “நான் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறேன். எங்கு சென்றாலும் 99 சதவிகிதம் எடப்பாடி என்றுதான் எழுதியிருக்கிறது. ஒரு சதவிகிதம் தான் என் பெயர் எழுதியிருக்கிறது. எடப்பாடி என்றால் நீங்கள் அனைவரும் தான்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “பல முறை நானும் அதிமுக எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றத்தில் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொண்டுவந்தனர். அதிமுக இல்லாவிட்டால் இந்த திட்டம் வந்திருக்காது.
திமுககாரர்கள் ஊர் ஊராக செல்கிறார்கள். அங்கு விளம்பரம் செய்யும்போது, அந்த குடும்பத் தலைவி சுவரில் விளம்பரம் செய்ய அனுமதிக்கவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடுவோம் என திமுககாரர்கள் மிரட்டுகிறார்கள்.
மகளிர் உரிமை தொகையை யாராவது நிறுத்தினால் நான் சட்டமன்றத்தில் சும்மா விடமாட்டேன். அதிமுக விட்டுவிடாது.
மக்களை மிரட்டி சின்னம் வரைந்து வாக்குகளை பெற வேண்டுமா? அதிமுக இப்படி ஒருபோதும் நடந்துகொண்டது கிடையாது. எங்களது திட்டங்களை சொல்லி மக்களுக்கு சம்மதம் என்றால் தான் விளம்பரம் செய்வோம்.
குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் நிறுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரியின் பணி போய்விடும். இவர்கள் சும்மா இந்த பணத்தை கொடுக்கவில்லை. சட்டம் இயற்றி கொடுக்கிறார்கள்.
எந்த பெண்களும் பயப்பட வேண்டாம். 1000 ரூபாய் வழங்குவதை நிறுத்திவிடுவோம் என்று யாராவது சொன்னால், அந்த பகுதி அதிமுகவினரிடம் சொல்லுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
மகளிர் உரிமைத் தொகை என்பது திமுக அரசின் முக்கிய திட்டமாக இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் இந்த திட்டத்தை குறிப்பிட்டு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசி வருகிறார்.
நேற்று கூட வேலூரில் பேசிய ஸ்டாலின். “தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 1 கோடியே 15 இலட்சம் மகளிர் இந்தத் திட்டத்தின் மூலமாக, வாங்கும் ஆயிரம் ரூபாயை, “எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் தாய்வீட்டுச் சீர்” என்று உரிமையோடும், மகிழ்ச்சியோடும் சொல்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நேரடியாக மோதுவது இந்நாள் முன்னாள்…நீலகிரியில் தகிக்கிறது அரசியல் அனல்!
IPL 2024: தயவுசெஞ்சு நீங்களே டீமை கலைச்சிருங்க… பறக்கும் மீம்ஸ்கள்!