டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

அரசியல்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 11) மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது உறவினர்களுக்கு ரூ.4800 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒப்பந்தங்களை ஒதுக்கியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 2018-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தார்.

அவர் அளித்த புகார் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் விசாரணை அறிக்கை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த புகாரில் முகாந்திரம் இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று வாய்மொழி தகவலாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கவும் உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறையால் 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் குறைகாண முடியாது. புதிய விசாரணை நடத்துவதற்கு எந்த காரணமுமில்லை. ஆட்சி மாற்றம் நடந்ததால் மட்டுமே புதிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்த வழக்கை கடந்த ஜூலை மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்தநிலையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

“இசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் விசாரணை” – தாம்பரம் காவல் ஆணையர்

”கலக்கமடைந்துள்ளேன்”: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை!

 

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *