18 வது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு காலையிலேயே சென்று வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சிவகங்கை கண்டனூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தென் சென்னை பாஜக வேட்பாளரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வாக்களித்தார்.
அவர் வாக்களித்து விட்டு வெளியே வரும்போது, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் வாக்களிக்க வந்தனர்.
அப்போது பிரேமலதாவும் தமிழிசை சௌந்தரராஜனும் ஆரத்தழுவி, கைக்குலுக்கி அன்பை பரிமாறிக் கொண்டனர். எதிரெதிர் அணியில் உள்ள நிலையில் தமிழிசை, பிரேமலதா பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளரும் பாமக தலைவர் அன்புமணியின் மனைவியுமான சவுமியா அன்புமணி வாக்களித்தார்.
கொட்டிவாக்கம் நாடார் பள்ளியில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் வாக்களித்தார்.
அரவக்குறிச்சி ஊத்துபட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மாநில தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை தனது வாக்கை செலுத்தினார்.
தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி திமுக கூட்டணி வேட்பாளருமான துரை வைகோ வாக்களித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
உங்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகமா? தெரிந்து கொள்வது எப்படி?
தொடங்கிய வாக்குப்பதிவு : வாக்காளர்களிடம் மோடி வேண்டுகோள்!