அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 9) இரவு டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராகக் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதிமுக அலுவலக சாவி வழக்கிலும் அவருக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அவர் டெல்லியில் 3 நாள் முகாமிட திட்டமிட்டிருப்பதாகவும், இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரையும் சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அதிமுக தரப்பில் விசாரித்த போது, “ தேர்தல் ஆணையத்திலிருந்து வர சொல்லியிருக்கிறார்கள். அதனால் எடப்பாடி பழனிசாமி டெல்லி போகிறார். இந்த பயணத்தில் மோடியையும், அமித் ஷாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இருவரையும் சந்திப்பதற்காக நேற்று மாலை முதல் இன்று மதியம் வரை தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இருவரிடம் இருந்தும் இதுவரை அப்பாயிண்ட்மெண்ட் எதுவும் கிடைக்கவில்லை” என்கின்றனர்.
ஏற்கனவே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பதவி ஏற்பு விழாவுக்குச் சென்றிருந்த போது எடப்பாடி பழனிசாமி மோடியையும், அமித் ஷாவையும் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
அப்போது இருவரும் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கவில்லை. இதனால் முன் கூட்டியே தனது பயண திட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று திடீர் பயணமாக டெல்லி செல்கிறார்.
ஈபிஎஸ் டெல்லி செல்லும் அதே சமயத்தில். ஓ.பன்னீர் செல்வம் காசி செல்கிறார். தனது மனைவி மறைந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் ராமேஸ்வரத்தில் நேற்று ஓபிஎஸ் திதி கொடுத்தார். அதைத்தொடர்ந்து காசி செல்ல திட்டமிட்டுள்ளார்.
ஓபிஎஸ் ஏற்கனவே காசி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்போது அதிமுகவில் உட்கட்சி மோதல், நீதிமன்ற வழக்கு என பரபரப்பாக இருந்தது.
அதோடு தாய்க்கு மூத்த பிள்ளைதான் அனைத்து சடங்குகளும் செய்ய வேண்டும் என்பதால் ஓபிஎஸின் மூத்த மகனும், அதிமுக எம்.பி.யுமான ரவீந்திர நாத் ஏற்கனவே காசி சென்று தனது அம்மாவுக்கான சடங்குகளை முடித்துவிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் காசி செல்கிறார்.
பிரியா