ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் வாய்ப்பு இருந்தால் பங்கேற்பேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 11) சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸுக்கு விதித்த தடை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘இது வரவேற்கத்தக்கது’ என்றார்.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து…
நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக எல்லா வகையிலும் ஆக்கப்பூர்வமான பணிகளை செய்துகொண்டிருக்கிறது.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கிறீர்களா?
யார் விருப்பப்பட்டாலும் அவர்கள் பங்கேற்கலாம். அதிமுக மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. எனக்கு வாய்ப்பு இருந்தால் நான் கலந்துகொள்வேன். எனக்கு கால்வலி இருக்கிறது. கொஞ்சம் சிரமும் இருக்கிறது. பொறுத்துதான் முடிவு செய்ய வேண்டும்.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரம் பற்றி…
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. எனவே கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை.
அதிமுகவில் முதற்கட்டமாக 20 வேட்பாளர்களை அறிவித்து மறைமுகமாக களப்பணியாற்ற உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறதே?
அதிமுகவில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்பாளர்கள் யாரும் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. போட்டியிடுபவர்களிடம் விருப்பமனுக்கள் பெற்ற பின்னர் கழக மூத்த நிர்வாகிகள் மூலம் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய்ந்து அதன் பிறகு முடிவு செய்யப்படும்.
கூட்டணி குறித்து…
தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணியில் யாருக்கு எவ்வளவு சீட் என்பது குறித்து அறிவிக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர். “போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கையை பல முறை வலியுறுத்தியும் அரசு நிறைவேற்றவில்லை.
அவர்களின் குறைந்தபட்ச கோரிக்கையும் அரசு நிராகரித்து விட்டது. அதனால் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி அவர்கள் இப்போது பணிக்கு திரும்பி உள்ளார்கள்.
போக்குவரத்து கழங்களில் 22,000 பேருந்துகள் இருந்த நிலையில் தற்போது 16 ஆயிரம் பேருந்துகள் தான் இயங்குகிறது. 5,000 பேருந்துகள் பழுதடைந்து ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3,486 பேருந்துகளில் 2600 பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. 850 பேருந்துகள் இயக்கப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் 500 மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்று சொல்லி வருகின்றனர். ஆனால், இன்னும் மின்சாரப் பேருந்து வந்த மாதிரி தெரியவில்லை.
சுற்றுச்சூழலுக்கு உகந்த 3,213 பிஎஸ்6 பேருந்துகள் வாங்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் ஒன்று கூட வாங்கவில்லை. இதுதான் திமுக ஆட்சியின் அவலம். எங்கு பார்த்தாலும் ஓட்டை உடைசல் பேருந்துகளும், மழையில் ஒழுகும் பேருந்துகளும் தான் ஓடிக்கொண்டிருக்கின்றது.
சிவகங்கையில் ஓட்டுனர் ஒருவர் பேருந்து இயக்க முடியவில்லை என்று கூறி ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். போக்குவரத்து துறையில் நிர்வாக திறமையற்ற அரசாங்கம் இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து சலுகை என்று கூறிவிட்டு இப்போது அடையாளபடுத்தப்பட்ட குறிப்பிட்ட பேருந்துகளுக்கு மட்டும் தான் கட்டணமில்லா சலுகை என்று நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். மற்ற பேருந்துகளில் சென்றால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச சலுகை பேருந்து குறைந்த அளவில் தான் இயக்கப்படுகின்றன. இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
தொழில் முதலீட்டாளர் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை கேட்டேன். இதுவரை அவர்கள் வெளியிடவில்லை.
2015ம் ஆண்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உலக முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தினார். அதன் மூலம் பல தொழிற்சாலைகள் வந்தன. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அதிமுக அரசு 2019ல் மீண்டும் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 3 லட்சத்து 5,000 கோடி ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தோம்.
அப்போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கூட இப்போது உள்ள திமுக அரசு நிறைவேற்ற வில்லை. இப்போது விளம்பரத்திற்காக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்துகிறார்கள் என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது. அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தால் மக்களுக்கு அதன் விவரம் தெரிந்திருக்கும். அதனால் தான் நான் வெள்ளை அறிக்கை கேட்டேன்.
நாங்கள் வலியுறுத்திய பிறகு பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் தருவதாக இந்த அரசு அறிவித்துள்ளது. அதிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தான் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்கள். பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்கள். பொங்கல் அனைவருக்கும் பொதுவானது. அனைவரும் மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாட வேண்டும் என்றால், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பொங்கல் : கோயம்பேடு டூ கிளாம்பாக்கம் அலைக்கழிக்கப்படும் மக்கள்… தப்பிக்க என்ன வழி?