அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 8 ) ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வந்தார். உள்ளே சென்று முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் பின்னர் வெளியே வந்தார்.
அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக பொதுக்குழு கூடி அதில், முக்கிய தீர்மானங்கள், முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பு உருவாக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப் படி தலைமை கழகம் எங்களிடம் கொடுக்கப்பட்டது. அதனால் இன்று தலைமை கழகம் வந்திருக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்றைய ஆட்சியாளர்கள் பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடந்த அன்று தலைமை கழகத்தின் கேட், கதவுகளை எல்லாம் உடைத்து உள்ளே சென்றனர்.
கணினிகளை எல்லாம் உடைத்து வெளியே எடுத்து வந்து எரித்துள்ளனர். கழகத்துக்குச் சொந்தமான இடத்தின் பத்திரங்களை எல்லாம் திருடிச் சென்றுவிட்டனர்.
வேண்டும் என்றே திட்டமிட்டு கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்தும் இந்த திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் நீதிமன்றத்துக்குச் சென்றோம். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மீண்டும் நீதிமன்றம் சென்றோம். அப்போதுதான் சிபிசிஐடி விசாரிக்கும் என்று தெரிவித்தார்கள்.
நேற்று அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. பிரதான எதிர்க்கட்சி அலுவலகத்தில் திருடு போயுள்ளது என்று புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுக அரசில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும் என்று அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “அதிமுகவைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, அவர் மறைவுக்குப் பிறகும் சரி எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டது.
எப்போதெல்லாம் சோதனை ஏற்பட்டதோ அதனை வென்று சாதனை படைத்தது. எனவே மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்போம்” என குறிப்பிட்டார்.
4 மாத காலத்துக்குள் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே என்ற கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ”இந்த தீர்மானம் நிறைவேற்றியது உண்மை.
ஆனால் அவர்கள் நீதிமன்றம் சென்றுவிட்டார்கள். இதனால் அதற்கான பணி தடைப்பட்டது. விரைவில் தேர்தலுக்கான பணி தொடங்கும்” என்றார்.
அதிமுகவுக்குள் பிளவு என்பதே கிடையாது, ஒரு சிலர் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதால் பொதுக்குழுவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்த அவர், “ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்க முடியாது.
உயர்ந்த பொறுப்பிலிருந்த அவர் கொள்ளைக் கூட்டத்தின் தலைவர் போல் செயல்பட்டார். இப்படிப்பட்டவர்களைத் தொண்டர்கள் எப்படி மன்னிப்பார்கள், எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.
திமுகவுக்குப் பினாமியாக இருந்துகொண்டு அதிமுகவை உடைக்க வேண்டும், எங்களை பற்றி அவதூறாக செய்தி வர வேண்டும் என்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.
கட்சியையும், சின்னத்தையும் முடக்க முடியாது என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, “புகார் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் ஆதாரம் இருக்க வேண்டும்.
பெரும்பாலான உறுப்பினர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். எனவே யாரும் எதையும் செய்துவிட முடியாது” எனக் கூறினார்.
சசிகலா, தினகரன் குறித்த கேள்விக்கு, “ஓபிஎஸ் பச்சோந்தியைக் காட்டிலும் நிறம் மாறக் கூடியவர். சந்தர்ப்பவாதி. அவருக்கு தேவை என்றால் எதை வேண்டுமானாலும் செய்வார். இவர் செய்த தர்ம யுத்தத்தால் தான் கட்சி பிரிந்தது.
ஆட்சி என் தலைமையிலிருந்த போது எதிர்த்து சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வாக்களித்தவர் அண்ணன் ஓபிஎஸ். அம்மாவுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று கூறுவார்.
அம்மா 1989ல் சட்டமன்றத் தேர்தலில் போடி தொகுதியில் நின்றார். அங்கு ஜானகி அணியிலிருந்து வெண்ணிற ஆடை நிர்மலா நிறுத்தப்பட்டார். அப்போது அம்மாவுக்கு ஆதரவாகச் செயல்படாமல், வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக செயல்பட்டார்.
அதுவும் தலைமை ஏஜெண்ட்டாக இருந்து செயல்பட்டார் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இப்படிப்பட்டவர் கட்சிக்கு அவசியமில்லை. அப்போது முதல் இப்போது வரை நான் அம்மாவுக்கு ஆதராவகத்தான் செயல்படுகிறேன்” என்றார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தது குறித்துப் பேசிய அவர், ”5 வருஷமா இதைத்தான் சொல்கிறார்கள். நான் முதல்வராகப் பொறுப்பேற்ற போது எடப்பாடி தலைமையிலான ஆட்சி ஒரு மாசம் கூட நிற்காது, 3 மாசம் கூட நிற்காது என்று ஸ்டாலின் கூறினார்.
4 ஆண்டுகள் 2 மாதம் சிறப்பான ஆட்சியைத் தந்தேன். யார் இந்த ஆர்.எஸ் பாரதி? எங்கேயாவது போய் நின்று ஆர்.எஸ்.பாரதியை வெற்றி பெறச் சொல்லுங்கள் பார்ப்போம்.
முரடர்களையும், குண்டர்களையும் வைத்து ஆட்சி செய்கிற கட்சி திமுக. அதிமுக தொண்டனைக் கூட திமுக அசைத்துக் கூட பார்க்க முடியாது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக முதல்வரும், உதயநிதி எம்.எல்.ஏ.வும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றனர். 15 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் எதுவும் செய்யவில்லை. அத்தனையும் பொய். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால், திமுகவுக்கு கொடுக்கலாம்” என்றார்.
ஓபிஎஸ் விரைவில் உண்மையை வெளிப்படுத்துவோம் என்று சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “நான் என்ன அலுவலக கேட்டை உதைத்தேனா? பொருளை திருடிச் சென்றேனா? என்ன உண்மையை சொல்லுவார்” என கேள்வி எழுப்பினார்.
பிரியா
”என்னோடு 10 திமுக எம்.எல்.ஏ.க்கள் பேசி வருகிறார்கள்!” – பழனிசாமி