edappadi palaniswami slams governor speech

ஆளுநர் வெளிநடப்பு : நழுவிய எடப்பாடி

அரசியல்

தமிழக அரசின் ஆளுநர் உரை என்பது ஊசிப் போன உணவு பண்டம் போல் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (பிப்ரவரி 12) கூடிய நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசின் உரையை வாசிக்காமல் புறக்கணித்தார்.

ஆளுநரின் செயல்பாட்டுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,  “ஆளுநர் உரையில் எதிர்வரும் ஆண்டில் ஆளும் அரசு என்னென்ன நல திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கவுள்ளது என்பதற்கான கொள்கைகளை சுருக்கமாக கூறுவதுதான் மரபு.

ஆனால் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆளுநர் உரையில் எந்தவிதமான குறிப்பும் இல்லை. இந்த அரசின் கொள்கைகளை விளக்கும் உரையாக இல்லை.

எனவே இந்த விடியா ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டாது என்பதை நிரூபிக்கும் வகையில்தான் இந்த ஆளுநர் உரை உள்ளது.

எந்தவிதமான புதிய மக்கள் நலத் திட்டங்களையும் அறிவிக்காத இந்த அரசு பசப்பு வார்த்தைஜாலங்களை வாரி இறைத்திருக்கிறது.

எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, முடிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை  ரிப்பன் வெட்டி திறந்துவிட்டு தங்கள் முதுகில் தாங்களே தட்டிக் கொள்வது மட்டுமல்லாமல், ஆளுநரை கொண்டு தடவிக் கொடுக்கச் செய்வது வெட்கக்கேடானது.

சுருக்கமாக இந்த ஆளுநர் உரை என்பது உப்பு சப்பில்லாத ஊசிப் போன உணவுப் பண்டம்” என்று கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து அவர், “ஆளுநர் ஏற்கனவே கடிதம் எழுதியிருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இதை சபாநாயகர் நிறைவேற்றாத காரணத்தால் ஆளுநர் தனது உரையை படிக்கவில்லை.

இது அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இருக்கும் பிரச்சினை. என்ன பிரச்சினை என்று அரசையும், ஆளுநரையும் தான் கேட்க வேண்டும். அவர்களிடம் கேட்டால்தான் ஒரு விடிவு கிடைக்கும்.

சபாநாயகர் பல மரபுகளை கடைபிடிப்பதில்லை. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர், துணைத்தலைவர் இருக்க வேண்டும். இதுமரபு தானே. இதை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்பதில்லை.

இனியாவது சபாநாயகர் மரபை கடைபிடிப்பார் என எதிர்பார்க்கிறேன். துணை தலைவர் பதவி தொடர்பாக மூத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், சபாநாயகரை சந்திப்பார்கள்.

உதயகுமாரை துணை தலைவராக அங்கீகரித்து அவருக்கான இருக்கையை ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். ஆனால் சபாநாயகர் ஒவ்வொரு முறையும், ஒரு காரணத்தை சொல்லியிருக்கிறார்.

மரபை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லும் சபாநாயகர், எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்” என்றார்

“சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையோடு இருக்க வேண்டும், அவர் ஒருதலைபட்சமாக  போகிறார் என்றால் என்ன செய்வது என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் என்றுதான் மக்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்பார்ப்பு” என கூறினார் எடப்பாடி பழனிசாமி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

இசை நிகழ்ச்சியை இப்படித்தான் நடத்த வேண்டும்… ரசிகர்களை மகிழ்வித்த ‘நீயே ஒளி’

ஆளுநருக்கு எதிராக சபாநாயகர் அவதூறு: ஆளுநர் மாளிகை விளக்கம்!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
1
+1
1
+1
0