தமிழகத்தில் திமுக அதிமுக இடையே தான் போட்டி: எடப்பாடி

அரசியல்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தான் போட்டி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 24) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா,  புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, எஸ்டிபிஐ கட்சி தலைவர் முபாரக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக, பாஜக தலைமையிலான கூட்டணிகளும் தேர்தலை சந்திக்கின்றன. ஆனால், தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தான் போட்டி. இதனை தமிழ்நாடு மக்கள் அறிவார்கள்.

திமுக பிரச்சார கூட்டங்களில் முதல்வர் ஸ்டாலின், பிரதமரை பற்றி விமர்சிப்பார். அதை பற்றி நமக்கு கவலையில்லை. பின்னர் என்னை பற்றி விமர்சிப்பார். இது இரண்டும் தான் அவர் பேசும்போது பார்க்கிறோம். வேறு எதுவுமே அவர் பேசுவதில்லை.

தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். எம்ஜிஆர் இந்த மண்ணில் பிறந்ததால் தமிழ்நாடு தப்பியது. திமுக குடும்பத்தில் இருந்து தமிழகத்தை தப்பிக்க வைத்தவர் எம்ஜிஆர்.

எப்போது பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் மூன்று வருடமாக செங்கலை காட்டிக்கொண்டிருக்கிறார். இந்த செங்கலை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும், சாலையில் காட்டி எந்த பயனுமில்லை. விளம்பரத்திற்காக செங்கலை காண்பிக்கிறார். ஸ்கிரிப்டை மாற்றுங்கள் உதயநிதி, செங்கலையே காட்டிக்கொண்டிருக்க வேண்டாம்.

அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மீது ஸ்டாலின் பொய்வழக்கு போட்டுள்ளார். அதிமுக பொன்விழா கண்ட கட்சி. எம்ஜிஆர் இருக்கும்போதும் எவ்வளவோ வழக்குகளை சந்தித்துவிட்டோம், ஜெயலலிதா இருக்கும் போதும் வழக்குகளை சந்தித்தோம், சிறைக்கு சென்றோம். அதைப்பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை.

நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டியது தான் எங்களது லட்சியம், அதற்காக எத்தனை தியாகங்களையும் செய்யத் தயார். எங்களை மிரட்டி பழிவாங்க முடியாது.

நான்காண்டு காலம் நான் முதல்வராக இருந்தபோது, இப்போது இருந்த எத்தனை அமைச்சர்கள் மீது வழக்கு போட்டிருக்க முடியும்? பொறுமையாக இருக்கிறேன். இப்போதுள்ள அமைச்சர்களின் ஊழல் பட்டியலை சேகரித்து வைத்துள்ளேன். 2026-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமையும் போது  என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மதிமுக துரைவைகோ வேட்புமனு தாக்கலில் திடீர் குழப்பம்!

சஞ்சு சாம்சன் மிரட்டல் பேட்டிங்… அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *