சென்னை மண்டலத்தில் 891 சட்டவிரோத பார்கள் மூலம் கரூர் கம்பெனிக்கு ஆண்டுக்கு ரூ.2000 கோடி வருமானம் கிடைப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் இன்று ஆளுநர் மாளிகைக்கு பேரணியாக சென்று திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மதுவிலக்கு அமலாக்கத்துறையின் சிறப்பான நடவடிக்கையினால் கடந்த 13 வருடங்களாக தமிழகத்தில் கள்ளச்சாராய இறப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்று 2023-ஆம் ஆண்டு கொள்கை விளக்க குறிப்பில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதன்மூலம் அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடைபெறவில்லை என்று செந்தில் பாலாஜியே ஒப்புக்கொண்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை ஆகிய ஐந்து மண்டலங்களில் 6346 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் 70 சதவிகித கடைகளில் பார் வசதி இருந்தது. தற்போது 25 சதவிகித பார்கள் மட்டுமே லைசன்ஸ் வாங்கி டெண்டர் எடுத்து நடத்தி வருகிறார்கள். மீதமுள்ள 75 சதவிகித பார்கள் முறைகேடாக இயங்கி வருகிறது. டெண்டர் எடுக்காமல் முறைகேடாக நடைபெற்று வரும் பார்களில் தான் போலி மதுபான விற்பனை நடக்கிறது.
சென்னை மண்டலத்தில் 97 சதவிகித பார்கள் சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. கரூர் கம்பெனியை சேர்ந்தவர்கள் டெண்டர் விடாத பார்களை கண்டறிந்து 75 சதவிகித பார்களை ஆளும் கட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு நடத்தி கொண்டிருக்கிறார்கள். இதில் வரும் வருமானம் மேலிடத்திற்கு போவதாக சொல்கிறார்கள். சென்னை மண்டலத்தில் 914 டாஸ்மாக் கடைகள் உள்ளது. 23 கடைகளில் தான் பார் வசதி உள்ளது. சட்டவிரோதமாக 891 பார்கள் இயங்கி வருகிறது. இதில் மட்டும் ஆண்டுக்கும் ரூ.2000 கோடி வருமானம் கிடைக்கிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்