அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஆர்.எஸ்.பாரதி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா 115-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் இன்று சென்னை தாம்பரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன்காரணமாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சியில் நாம் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.
நமது அரசின் திட்டங்களுக்கு திமுக மூடுவிழா நடத்தி வருகிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா, போதை நடமாட்டங்கள் அதிகரித்துள்ளது. இரண்டாண்டு காலத்தில் இரண்டு லட்சத்து எழுபத்து மூவாயிரம் கோடி கடன் திமுக அரசு வாங்கியுள்ளது. திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்ந்துள்ளது. மருத்துவத்துறை சீரழிந்துவிட்டது. மருத்துவமனையில் தேவையான மருந்துகள் இல்லை.
காவல்துறையினருக்கே திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பதில்லை. மீண்டும் மக்கள் ஆதரவோடு அதிமுக ஆட்சிக்கு வரும். என் மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்கிறார்கள். திமுகவின் ஏவல்துறையாக லஞ்ச ஒழிப்புத்துறையும் காவல்துறையும் செயல்பட்டு வருகிறது.
ஆர்.எஸ்.பாரதி நங்கநல்லூர் கட்டிட சங்க தலைவராக இருந்தபோது பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. சுபநகர் வீட்டுமனை விற்பனையில் வழிகாட்டி மதிப்புகளை குறைத்து காட்டி மோசடி செய்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார். போலி ஆவணங்கள் மூலமாக கடன் வழங்கியுள்ளார்.
விதிமுறைகளை மீறி துறை அனுமதியின்றி சங்க கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அவருடைய பெயரில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்துள்ளார். இத்தனை ஊழல்கள் செய்தவர் ஆர்.எஸ்.பாரதி. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த ஊழல்கள் தூசி தட்டி எடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திமுக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
மார்க் ஆண்டனி : தியேட்டர் உரிமையாளர்கள் சொல்வது என்ன?
மகளிர் உரிமை தொகை: தலைவர்கள் கருத்து!