அரசின் அலட்சியத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 8) குற்றம் சாட்டியுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர், பால் கிடைக்கவில்லை. புயல் குறித்து ஒரு வாரமாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தகுந்த முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் சென்னை மற்றும் புறநகர் மாவட்ட மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்க மாட்டார்கள். இதற்கு முழு பொறுப்பு திமுக அரசு தான்.
அதிமுக அரசு இருந்தபோது வட கிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் விரைவாக அப்புறப்படுத்தப்பட்டது.
மழை பெய்த பிறகு தான் ராட்சத மோட்டாரை என்.எல்.சி நிறுவனத்திடம் கேட்டிருப்பதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்காதது நிரூபணமாகியுள்ளது.
2015,2018,2020 காலகட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு நாளில் துண்டிக்கப்பட்ட மின் சேவை மீண்டும் கொடுக்கப்பட்டது. 4 நாட்களாகியும் இன்னும் முழுமையாக மின் சேவை வழங்கப்படவில்லை. அரசின் அலட்சியத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
’ரூ.4500 கோடியில் மழை நீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. 20 செ.மீ மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது’ என்று கூறினார்கள். தற்போது குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நீர் வடிகால் பணி தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். சென்னையில் உள்ள இரண்டு அமைச்சர்களும் மழை நீர் எங்குமே தேங்கவில்லை என்று கூறுகிறார்கள்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களை அழைத்து, தண்ணீர் தேங்கிய இடங்களில் அப்புறப்படுத்தவும், மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தவும் ஆலோசனை வழங்கினேன்.
2015-ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது 40 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 3 நாட்கள் தொடர் மழை பெய்தது. 6 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தது. அப்படிப்பட்ட நிலையிலும், மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது மக்களுக்கு நிவாரணம் எதுவும் வழங்கவில்லை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட மழை நீர் வடிகால் பணியை தான் திமுக அரசு துவங்கினார்கள். திட்டத்தை முழுமையாக நிறைவேற்றியிருந்தால், வடிகால் வசதி எளிதாக இருந்திருக்கும்.
தண்ணீரை அகற்றுவதற்கு நிதி இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் கார் பந்தயம் நடத்த ரூ.42 கோடி வீண் செலவு செய்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து அவரிடம், இடைத்தேர்தல் வந்தால் அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்றுகிறார்கள். ஆனால் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளில் மற்ற மாவட்ட செயலாளர்கள் வராதது ஏன்? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “மாவட்ட செயலாளர்கள் அனைவரும் களத்தில் உள்ளனர். கட்சி நிர்வாகிகள் தங்களுடைய சொந்த பணத்தில் தான் தங்களால் முடிந்த நிவாரணத்தை கொடுக்கிறோம். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கி வருகிறோம். எஸ்.பி.வேலுமணி ரூ.30 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளார்” என்று தெரிவித்தார்.
பேரிடர் காலகட்டங்களில் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறியது குறித்த கேள்விக்கு, “விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் போட்டியிட போகிறார். அதனால் மாற்றி மாற்றி பேசுகிறார்” என்று எடப்பாடி பழனிசாமி பதலளித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்முடி வழக்கு : தலைமை பதிவாளர் எதிர் மனுதாரராகச் சேர்ப்பு!
அதானிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? – மஹூவா மொய்த்ரா ஆவேசம்!