திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் இல்லை: எடப்பாடி
திமுக ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 15) குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று நான்காவது நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், சட்டமன்ற வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “சட்டமன்றத்தில் நேற்று நான் பேசியபோது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறுக்கிட்டு, அதிமுக ஆட்சியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கூட திறக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் எந்தெந்த தேதிகளில் அரசாணை வெளியிடப்பட்டது. எத்தனை ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டது என்ற விவரத்தை சட்டப்பேரவையில் இன்று நான் தெரிவித்தேன். அதற்கு மீண்டும் பேரவையில் இன்று மறுப்பு தெரிவிக்கிறார்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுக்களின் விவரங்கள் அவர்கள் சமர்ப்பித்த அறிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், முதல்வர் ஸ்டாலின் இன்றைய பதிலுரையின் போது அதுகுறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைழுத்தாகியுள்ளது. எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வியை முன்வைத்தேன். அதற்கும், முதல்வர் பதிலுரையில் எந்த பதிலுமில்லை.
திமுக அறிவித்த வாக்குறுதிகள் 10 சதவிகித அறிவிப்புகளை நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால், 90 சதவிகித தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
திமுக என்ன புதிய திட்டத்தை கொண்டு வந்தார்கள்? அதிமுக கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சட்டமன்றத்தை ஆளுநர் அரசியலுக்காக பயன்படுத்துகிறார்: ஸ்டாலின் குற்றச்ச்சாட்டு!
“இணைந்து குரல் கொடுப்போம்”: எடப்பாடிக்கு ஸ்டாலின் அழைப்பு!