திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை உச்சநீதிமன்றம் வரை சென்று தொடர்ந்து நடத்துவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுக பொன்விழா மாநாடு இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி அதிமுக தான். 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் தான் தமிழகம் வளர்ச்சி அடைந்தது.
நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய கட்சியாக அதிமுக உள்ளது. ‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி 10 நாட்கள் தாக்குப்பிடிக்குமா’ என்று ஸ்டாலின் ஏளனம் செய்தார்.
மக்களின் பேராதரவில் 4 வருடம் 2 மாதங்கள் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். மக்கள் அதிமுக அரசை பாராட்டினார்கள். மதுரை மண் ராசியான மண். இந்த மண்ணில் எதை தொட்டாலும் துலங்கும்.
ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மாநாட்டில் கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்து கொடுத்தது திமுக தான். இதனால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக தான் கச்சத்தீவை மீட்பதற்காக போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. திமுக அரசாங்கம் தான் ஊழலுக்காக கலைக்கப்பட்டது.
திமுக அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது.
திமுக வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமித்து ஊழல் வழக்குகளை அவசர அவசரமாக விசாரித்ததால் 4 அமைச்சர்கள் விடுதலையாகியிருக்கிறார்கள். நாங்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று அவர்கள் மீதான வழக்கை தொடர்ந்து நடத்துவோம்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கில் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. 3600 பார்கள் முறைகேடாக நடைபெற்று வருகிறது. முறைகேடாக நடைபெறும் பாரில் வரும் வருவாய் ஸ்டாலினுக்கு செல்கிறது. அதில் சிக்கிய செந்தில் பாலாஜி ஜெயிலில் உள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். நீதிமன்றத்திற்கு சென்று சட்டரீதியாக வெல்வோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
உதயநிதியின் உண்ணாவிரதம் ஒரு நாடகம்: எடப்பாடி பழனிசாமி
மதுரை அதிமுக மாநாட்டு மேடையில் பெரியார் படம்!