2026-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியமைத்தால், தலித் கிறிஸ்தவர்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 21) தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் சென்னை கீழ்பாக்கத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “அதிமுக சகோதர உணர்வையும் அன்பையும் சமத்துவ சிந்தனைகளையும் தனது ஆன்மாவாக கொண்ட இயக்கமாகும்.
அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்கள் எந்தவகையிலும் அச்சுறுத்தலுக்கும், பயமுறுத்தலுக்கும் உட்பட்டுவிடக்கூடாது என்பதில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் உறுதியாக இருந்தார்கள். அதையே இன்றைய தினம் அதிமுக தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறது.
சிறுபான்மை சமூகங்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய இயக்கம் அதிமுக. எத்தனை நெருக்கடிகள் எங்கிருந்து வந்தாலும், எங்கள் கொள்கையில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம் என்பதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்.
அதிமுக ஆட்சிகாலத்தின்போது தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருந்ததில்லை. சட்டம் ஒழுங்கு திறம்பட பாதுகாக்கப்பட்டதால், தமிழகத்தில் சாதி, மத, இன மோதல்கள் நடைபெறவில்லை.
திமுக அரசு சிறுபான்மை மக்களுக்காக எதையும் செய்யவில்லை. ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
வரும் 2026-ஆம் ஆண்டு தலித் கிறிஸ்தவர்களுக்கு, அரசால் தவிர்க்கப்படும் முன்னுரிமைகள் மற்றும் சலுகைகள் முழுமையாக கிடைக்கப்பெற அனைத்து முயற்சிகளையும் செய்ய அதிமுக பாடுபடும். ஜெயலலிதாவின் விருப்பப்படி, தலித் கிறிஸ்தவர்களுக்கு அனைத்து சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கையாகும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரகுபதி Vs அண்ணாமலை… அமைச்சரா? பேட்டை ரவுடியா? முற்றும் மோதல்!
43 ஆண்டுகளுக்குப் பிறகு குவைத் பயணம்… 101 வயது முதியவரின் ஆசையை நிறைவேற்றிய மோடி
Comments are closed.