பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 11 ) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் இன்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி ஒருங்கிணைப்பில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “பாஜகவுடன் அதிமுக மறைமுக உறவு வைத்திருப்பதாக இன்னும் சில பேர் சொல்கிறார்கள். நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். அதிமுக முன்னணி தலைவர்களும் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி விட்டோம்.
அதன்பிறகு வேண்டுமென்றே 5 மாதங்கள் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் ஒரு தவறான செய்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியிலும் அதிமுக இல்லை.
ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்களிடம் இறுதியாகவும் உறுதியாகவும் சொல்கிறோம் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை. இனி எந்த இடத்திலும் இந்த கேள்வியை கேட்காதீர்கள்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக இன்னும் கூட்டணி அமைக்கவில்லை என்று சொல்கிறார்கள். சரியான நேரத்தில் கூட்டணி அமைப்போம்” என்று தெரிவித்தார்.
சென்னையில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழகம் வரும் நிலையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இடிக்கப்பட்ட தீண்டாமைச் சுவர்: ஏன்? யாரால் தெரியுமா?