திருவண்ணாமலையில் அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் என்ன ரவுடிகளா என்று எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 19) கேள்வி எழுப்பியுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் 100 ஜோடிகளுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று திருமணம் நடத்தி வைத்தார். திருமண நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “அதிமுக சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது. பாஜக கூட்டணியிலிருந்து விலகியதை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக திட்டமிட்டு விஷமத்தனமான பிரச்சாரம் செய்து வருகிறார்கள். சிறுபான்மை வாக்குகளை திமுக ஏமாற்றி பெறுகிறார்கள். அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்.
அதிமுக ஆட்சியில் பின்தங்கிய தர்மபுரி மாவட்டத்தை பல்வேறு திட்டங்கள் மூலமாக வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்தோம். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக கிடப்பில் போட்டுள்ளது. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான். அப்போது திமுக மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தது. நீட் தேர்வை கொண்டு வந்துவிட்டு இப்போது அவர்கள் தான் எதிர்க்கிறார்கள்.
அதிமுக அரசு தான் மாணவர்களின் நலன் கருதி 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது. பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்தது தான் திமுக அரசின் சாதனை. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொலை. கொள்ளை, போதை நடமாட்டம் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டது.
100 சதவிகிதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். மகளிர் உரிமை தொகை இன்னும் பயனாளிகளை சென்று சேரவில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. விவசாயிகள் என்ன ரவுடிகளா? இதனை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையாண்டு கொண்டிருக்கிறார்கள். திமுக குடும்ப கட்சி. அங்கு திறமைக்கு மரியாதை கிடையாது. திமுக அரசு என்பது மன்னராட்சி போல தான் நடக்கிறது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…