“அரைச்ச மாவையே அரைக்க வேண்டாம்” – அதிமுக – பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி

அரசியல்

“அதிமுக – பாஜக கூட்டணி ஏற்கனவே பேசி முடிந்த கதை. மீண்டும் அதையே பேசி அரைத்த மாவையே அரைக்க வேண்டாம்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 8) தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், 7.5 சதவிகித மருத்துவ இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு ஸ்டெத்தஸ்கோப் பரிசாக வழங்கினார். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,  “ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தொழில்துறைக்கும், விவசாயத்திற்கும் முன்னுரிமை கொடுத்தார். அந்தவகையில், 2015-ஆம் ஆண்டு தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, 2 லட்சத்து 62 ஆயிரம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2019-ஆம் ஆண்டில் மூன்று லட்சத்து ஐந்தாயிரம் கோடி தொழில் முதலீடுகளை நான் ஈர்த்தேன். 304 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டோம்.

இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியபோது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, முதலீடுகள் குறித்து ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டார்.

ஆனால், தற்போது பத்திரிகைகளில் மட்டும் தான் பல லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக செய்திகள் வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு எந்தெந்த தொழிற்சாலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது? என்று வெள்ளை அறிக்கையாக வெளியிட்டால் மக்கள் தெரிந்துகொள்வார்கள்” என்றார்.

விஜய் மாநாடு குறித்து பேசுகையில், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதிமுக ஆட்சியில் இருந்தபோது, ஆயிரக்கணக்கான போராட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்த அனுமதி கொடுத்தோம். ஆனால், திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுக்க காவல்துறை மறுக்கிறார்கள். அப்படியே அனுமதி கொடுத்தாலும் எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு போடுகிறார்கள். திமுக ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சி போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறது” என்றார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, ”இதெல்லாம் பேசி முடிந்த கதை. மீண்டும் மீண்டும் அதையே பேசி அரைத்த மாவையே  அரைக்க வேண்டாம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு!

சைக்கிள் ரைடு… விஜய்யை காப்பி அடித்தாரா விஷால்? – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *