வேளாண் பட்ஜெட்: “விவசாயிகளுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு”: எடப்பாடி
வேளாண் பட்ஜெட்டானது தமிழக விவசாயிகளின் வாழ்வில் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று (மார்ச் 21) தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாக வேளாண் பட்ஜெட் உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு ரூ.4000 ரூபாய் ஆதார விலை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்துவிட்டு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 வழங்குவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்துவிட்டு நெல் ரகங்களை பிரித்து ரூ.100, ரூ.50 வழங்குவது விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.13,500 மட்டுமே திமுக அரசு கொடுத்துள்ளது. அதிமுக ஆட்சியின் போது விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவராணத்தொகை வழங்கினோம்.
நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாததால் நெல் மணிகள் மழையில் நனைந்து முளைத்தது.
மழை நீர் வீணாகக்கூடாது என்ற நோக்கத்தோடு குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். அதிமுக அறிமுகப்படுத்திய திட்டம் என்பதால் அதனை கைவிட்டார்கள்.
திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் பயன்பெறும் காவிரி – குண்டாறு திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.
வேளாண் பட்ஜெட் என்ற மாய தோற்றத்தை உருவாக்கி விவசாயிகளை ஏமாற்றி வருகிறார்கள்.
திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது வேளாண் பட்ஜெட்டில் வேளாண் பெருங்குடி மக்களின் நல்வாழ்வுக்காக எந்த புதிய திட்டமும் இல்லாதது வேதனை அளிக்கிறது. இந்த வேளாண் பட்ஜெட்டானது தமிழக விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி துரோகி என்று தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். துரோகிக்கு அடையாளம் செந்தில் பாலாஜி தான். அவர் செல்கின்ற கட்சிக்கெல்லாம் துரோகம் இழைத்தவர். துரோகத்தை பற்றி அவர் பேசக்கூடாது.
திமுகவில் எவ்வளவு சீனியர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு கட்சிக்கு வந்து ஐந்து வருடங்கள் கூட ஆகாத செந்தில் பாலாஜி நேற்று பேட்டி கொடுக்கிறார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
பருத்தி உற்பத்தியை உயர்த்த திட்டம்!
தென்னை உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி!