ஆளுநர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திமுக பிரச்சார கூட்டத்தில் பேசும் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்,
“அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரைப் பற்றி பேசுவதில்லை. மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கு அனுமதி தராமல் ஆளுநர் இழுத்தடிப்பது, தமிழ்நாடு சட்டமன்றத்தை இழிவுபடுத்துவது இல்லையா? முதலமைச்சரான எனக்கு எப்படி கோபம் வருகிறதோ, அதே கோபம் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமிக்கும் வர வேண்டாமா? ஆளுநர் இப்படி இழுத்தடிப்பது தவறு என்று ஆளுநரைக் கேட்டிருக்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பி வருகிறார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 28) விருதுநகரில் தேமுதிக சார்பில் போட்டியிடும், தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி ஆளுநரை பற்றி பேசுவதே இல்லை என்று ஸ்டாலின் சொல்கிறார். இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அதிமுக அரசு மீது ஆளுநரிடம் பொய்யான ஊழல் குற்றச்சாட்டு புகார் கூறியவர் ஸ்டாலின். அப்போதெல்லாம் இவர்களுக்கு ஆளுநர் நல்லவர்.
இவர்கள் தப்பு செய்வதை தட்டி கேட்டால் ஆளுநர் மோசமானவர். இரட்டை வேடம் போடும் கட்சி திமுக.
திமுக அரசின் ஊழல்களை துறைகள் வாரியாக பட்டியலிட்டு ஆதாரங்களுடன் ஆளுநரிடம் நாங்கள் மனு அளித்தோம். போதைப்பொருள் விற்பனை, மதுபான பாட்டிலுக்கு ரூ.10 வாங்கப்பட்டது, சட்டவிரோத மதுமான பார் ஆகியவற்றை பட்டியலிட்டு கொடுத்தோம். ஆனால் இதுவரை ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை.
நாங்கள் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் ஏன் தாமதப்படுத்துகிறார்.
முதல்வரின் மருமகன் சபரீசனும், உதயநிதி ஸ்டாலினும் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து உள்ளதாக நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் பேசியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் புகார் மனுவை கொடுத்தேன். ஆனால் ஆளுநர் விசாரிக்கவில்லை.
ஆளுநர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆளுநர் விசாரித்து இருந்தால் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வந்திருக்கும். ” என கூறினார் எடப்பாடி பழனிசாமி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
”முத்திரைத் தாளுக்கு வித்தியாசம் தெரியாதவர் ஐபிஎஸ் ஆ?” : திமுக எம்.பி விமர்சனம்!
சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை : அமைச்சர் ஐ பெரியசாமி கோரிக்கை நிராகரிப்பு!