கச்சத்தீவை பற்றி பாஜக பேசுவது வேடிக்கையானது : எடப்பாடி பழனிசாமி

Published On:

| By Kavi

10 ஆண்டு காலத்தை கழித்துவிட்டு, இப்போது கச்சத்தீவை பற்றி பாஜக பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 2) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஈடுபட்டார்.

அதிமுக சார்பில் போட்டியிடும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஜெயபிரகாசை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “அதிமுக கூட்டணிக்கு பலமில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கு வந்து பாருங்கள் எவ்வளவு பேர் இங்கு கூடியிருக்கிறார்கள் ” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “பல அரசியல் கட்சிகள் கச்சத்தீவு விவகாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

1974 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் திமுக ஆட்சி நடந்தது.

அப்போது இந்தியாவுக்கு உட்பட்ட கச்சத்தீவை இலங்கைக்கு தரைவார்த்தது காங்கிரசும் திமுகவும் தான்.

அதை மீட்பதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எவ்வளவோ முயற்சி செய்தார். 2008 ஆம் ஆண்டு அவர், கச்சத்தீவை மீட்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அப்போதும் மத்தியில் காங்கிரஸ் மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருந்தன. இதைப் பற்றி அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தது.  அப்போது பிரதமர் மோடிக்கு  ஜெயலலிதா கடிதம் எழுதினார். பிறகு நேரில் சந்தித்து கச்சத்தீவை மீட்கக் கோரி கோரிக்கை வைத்தார். ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

ஆனால் இப்போதே மத்தியில் ஆட்சி செய்பவர்களும், இங்கிருக்கும் பாஜக தலைவர்களும் கச்சத்தீவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதைப்பற்றி அவர்கள் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தார்கள். அப்போதெல்லாம் கிடப்பில் போட்டு விட்டார்கள்.

இன்றைக்கு அரசியல் சூழ்நிலை காரணமாக, தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் வாக்குகளை பெற வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கச்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில் தற்போது அதிமுக அமைப்பு செயலாளரை இணைத்திருக்கிறோம்.

இந்த வழக்கில் பதில் மனு போட வேண்டும். அதில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததை மீண்டும் மறுபரிசீலனை செய்வோம் என்று குறிப்பிடுங்கள்.

அப்படி செய்தாலே கச்சத்தீவு இந்தியாவோடு இணைக்கப்படும்.

பத்தாண்டு காலம் கச்சத்தீவை பற்றி எதுவும் பேசாமல், இப்போது மீனவர்கள் மீது கரிசனம் வந்திருக்கிறது என்றால் அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக தான். இது வேடிக்கையாக இருக்கிறது” என்று  விமர்சித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஜான்வி காதலுக்கு ‘பச்சைக்கொடி’ காட்டிய போனி கபூர் … மாப்பிள்ளை யாருன்னு பாருங்க!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு : அமீரிடம் ஆறு மணி நேரமாக விசாரணை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel