“நாட்டுக்கு உழைத்த மாமனிதர் உதயநிதி”: எடப்பாடி கிண்டல்!

Published On:

| By Kavi

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடப்போகிறதா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வு என விலைவாசி உயர்வைக் கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று(டிசம்பர் 13) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் , “சொத்து வரி உயர்வை ரத்துசெய்ய வேண்டும், மின் கட்டண உயர்வை ரத்துசெய்ய வேண்டும்” என்று கோஷம் எழுப்பினர்.

இதன்பின் பேசிய எடப்பாடி பழனிசாமி, “எவ்வளவு மழை பெய்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் மக்கள் இங்குவந்துள்ளனர். சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை. இந்த கோட்டைக்குள் நுழைய எவ்வளவோ முயற்சிக்கிறார்கள். ஆனால் அதுநடக்காது” என்றார்.

மேலும் அவர், “நாளை ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு முடிசூட்டுவிழா நடக்கிறது. நாட்டுக்கு உழைத்த மாமனிதர் அவருக்கு நாளை முடிசூட்டுவிழா நடக்கிறது.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தார், அவருக்குப் பிறகு ஸ்டாலின் வந்தார். இந்நிலையில், உதயநிதியை முன்னணி தலைவராகக் கொண்டு வருவதற்கு நாளை இவ்விழா நடைபெறுகிறது.

உதயநிதி அமைச்சராகித்தான் தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா?. ஏற்கனவே எல்லா துறையிலும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது.

இவர் வந்தால் அந்த ஊழல்களுக்கு எல்லாம் தலைவராக இருந்து செயல்படுவார். எனவே வாரிசு அரசியலுக்கு, குடும்ப அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும்.

ஒரு மாநிலத்துக்கு ஒரு முதலமைச்சர், தான் இருப்பார். ஆனால் தமிழகத்தில், ஸ்டாலின், அவரது மனைவி, மருமகன், மகன் என 4முதல்வர்கள் இருக்கின்றனர்.

ஒரு முதலமைச்சர் இருந்தாலே தாக்குப் பிடிக்க முடியாது, இதில் 4முதலமைச்சர்கள் வேற இருக்கிறார்கள்.

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதிமுகவிலிருந்தவர்கள் தான் தற்போது அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருக்கின்றனர். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை” என்று கடுமையாகத் தாக்கி பேசினார்.

பிரியா

உதயநிதி பதவியேற்பு : எடப்பாடிக்கு அழைப்பு!

ஜி20 – எடப்பாடிக்கு அழைப்பு: பன்னீர் எதிர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share