எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி நேற்று இரவு இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 16) அதிகாலை மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாஜகவிலிருந்த சிடிஆர் நிர்மல்குமார், திலீப் கண்ணன் உள்ளிட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இதனைத்தொடர்ந்து அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.
கூட்டணியில் இருக்கும் போது பாஜகவிலிருந்து விலகுபவர்களை அதிமுக அரவணைக்கக் கூடாது என்றும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜகவினர் எரித்தனர். பாஜக இளைஞர் அணி தூத்துக்குடி மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி உள்ளிட்டோர் இந்த செயலில் ஈடுபட்டனர்.

இதற்கு அதிமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்தச்சூழலில் நேற்று இரவு தினேஷ் ரோடியை கட்சியிலிருந்து 6 மாத காலம் விலக்கி வைப்பதாகத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால் இன்று (மார்ச் 19) அதிகாலையே அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் மாநில பொதுச்செயலாளரும், கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளருமான பொன்.வி.பாலகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தினேஷ் ரோடியை 6 மாத காலம் கட்சியிலிருந்து விலக்கி வைப்பதாகத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் வெளியிட்ட அறிவிப்பு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. பாஜக இளைஞர் அணி தூத்துக்குடி மாவட்ட தலைவராக தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகப் பொன்.வி.பாலகணபதி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரியா