கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 5) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயான், வலையார் மனோஜ் உள்ளிட்டோருக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்தது.
இந்நிலையில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் மனுவில், “மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என்பதால் எனது வீட்டில் சாட்சியை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால், பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக உயர் நீதிமன்றத்துக்கு வரும்போது மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை கடந்த நவம்பர் 7ஆம் தேதி விசாரித்த நீதிபதி என் சதீஷ்குமார், எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டதுடன் வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறக்கூடிய காரணங்கள் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை என்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதோடு, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டிருந்தனர்
இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது , நீதிமன்றத்தில் ஆஜராவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும், பொங்கல் விடுமுறை மற்றும் சட்டப்பேரவை நடைபெற உள்ளதால் அதன் பின்னர் ஆஜராக தயாராக இருப்பதாகவும் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கமளித்தனர்.
இதை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 30 , 31 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
மற்றொரு வழக்கு
முன்னதாக, கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க வேண்டும் என கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கையும் சாட்சி பதிவுக்காக, மாஸ்டர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பி வைத்தது.
இந்த வழக்கில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து, வழக்கறிஞர் ஆணையராக கார்த்திகை பாலனை நியமித்தார். ஒரு மாதத்திற்குள் சாட்சிகளை பதிவு செய்து அதன் அறிக்கையை ஜனவரி 12ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த டிசம்பர் 12ஆம் தேதி உத்திரவிட்டார்.
இந்த நிலையில் வழக்கறிஞர் கார்த்திகை பாலன் நேற்று, சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்று சாட்சியத்தை பதிவு செய்தார்.
ஒரு வழக்கில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் சாட்சியம் பதிவு செய்யப்பட்ட நிலையில், மற்றொரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மணல் குவாரி விவகாரம் : ED சம்மனுக்குத் தடை!
வாத்தி ஹீரோயினுக்கு விரைவில் திருமணம்?