பசும்பொன்னில் நடக்கும் தேவர் குருபூஜையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காதது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
முத்துராமலிங்க தேவரின் 115ஆவது ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு சென்று மரியாதை செலுத்த உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னுக்கு செல்லவில்லை என்றும் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்றும் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி அக்டோபர் 30ஆம் தேதி நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் போது போலீஸ் பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கும்படி சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மனு கொடுத்தார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் செல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், அது கட்சியின் நிலைப்பாடு. சென்னையாக இருந்தாலும் ராமநாதபுரமாக இருந்தாலும் தேவர் ஐயாவுக்கு புகழ் மாலை செலுத்த வேண்டும். அந்த வகையில் நந்தனத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
கடந்த காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் எவ்வளவோ நடந்திருக்கிறது. சில சூழ்நிலைகளில் ராமநாதபுரம் செல்வார்கள்.
சில சூழ்நிலைகளில் இங்கேயும் மரியாதை செலுத்துவார்கள். அதில் உள்நோக்கம் எதுவும் கற்பிக்கக் கூடாது என்று கூறினார்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பேசிய அவர், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வாய் திறக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
1998ல் இதுபோன்று நடந்த ஒரு சம்பவத்தில் 58பேர் பலியாகினர்.
தற்போது நடைபெற்ற சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை நடத்துகின்றனர். அது பற்றி நாம் கருத்து தெரிவிக்க முடியாது.
ஆனால் நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் முதல்வர் மௌனம் காப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
பிரியா
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு: முதல்வர் ஆலோசனை!
தீபாவளி படங்கள்: சாதித்த சர்தார் சறுக்கிய பிரின்ஸ்!