அதிமுக தலைமையை கைப்பற்ற ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளும் நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேவும் போராடி வருகின்றன.
கட்சி நிர்வாகிகள் சிலரை எடப்பாடி பழனிசாமி நீக்குவதும், அவர்களுக்குப் பன்னீர் செல்வம் புதிய பொறுப்புகளை வழங்குவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், தென்மாவட்டங்களில் உள்ள அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் சசிகலா மற்றும் ஓபிஎஸ் வசம் இருப்பதாகக் கூறி வருவதை, பொய்யாக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி மிக பிரமாண்டமான பொதுக்கூட்டத்தைக் கூட்ட பலே திட்டம் போட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் தென்மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாளை (செப்டம்பர் 29) மதுரை மற்றும் சிவகாசியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் மதுரையில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் சுமார் 25,000 பேரை திரட்ட ஈபிஎஸ் தரப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய முக்கிய பிரமுகர்களிடம் இதற்கான பொறுப்பை ஒப்படைத்து, வைட்டமின்களையும் ஈபிஎஸ் வழங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் மதுரை அதிமுக நிர்வாகிகள்.
இதனால் மதுரையை மையமாகக் கொண்ட மாவட்டங்களிலிருந்து மக்களைத் திரட்டி வர கடந்த 2 நாட்களாகத் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.

ஒவ்வொரு கிளை முதல் வட்டம் வரை வாகன வசதிகள் உட்பட மற்ற வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
இதற்குக் கொங்கு மண்டலத்திலிருந்து தனியார் பேருந்துகளும் மதுரைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாகக் கொண்டு வரப்பட்டுள்ள பேருந்துகளில் பச்சை வண்ணம் தீட்டப்பட்டு, “கழக பொதுச் செயலாளரே வருக வருக” என அவரது படத்துடன் வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை (செப்டம்பர் 29) காலை 7 மணிக்குச் சென்னை விமான நிலையத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி மதுரை செல்கிறார்.
வணங்காமுடி