கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக விழுந்துவிடும் : எடப்பாடி பழனிசாமி

Published On:

| By Kavi

திமுக, கூட்டணி கட்சித் தலைவர்களை நம்பிதான் இருக்கிறது. அவர்கள் கைவிட்டால் திமுக விழுந்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 22) அமைப்பு ரீதியான 82 மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் சேலம் புறநகர் மாவட்டத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “எதிரிகள் புறமுதுகை காட்டி ஓடுகிற அளவுக்கு அதிமுக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம். ஆனால் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று சரித்திரம் படைக்கவுள்ளோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையான கூட்டணியில் இருந்தோம். ஆட்சி அதிகாரத்தில் இருந்தோம். அப்போதுகூட எடப்பாடி தொகுதியில் 8000 வாக்குகள் குறைவாக பெற்றோம். ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் 92,000 வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். அவ்வளவும் உங்களுடைய உழைப்பு.

2019ல் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுதான் வெற்றி பெற்றது. அதுவே 2021 தேர்தலில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது.

அப்படியென்றால் எம்.பி.தேர்தலுக்கு ஒருமாதிரியும், சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதிரியும் மக்கள் வாக்களிக்கிறார்கள்.

துணை முதல்வர், “இது ஃபைனல் மேட்ச்” இல்லை என்கிறார். அப்படியானால் அடுத்து வரும் தேர்தல்தான் உண்மையான தேர்தல் என்று அவர்களுக்கே தெரிந்திருக்கிறது. அந்த ஃபைனல் மேட்சில்(2026 தேர்தல்) அதிமுகதான் கோப்பையை பெறும்” என்றார்.

மேலும் அவர், “ஊடகத்தினரும், பத்திரிகைகளும் தான் திமுகவை தூக்கி பிடித்திருக்கிறார்கள். உண்மை செய்திகளை வெளியிட்டால் போதும் திமுக டெபாசிட் கூட வாங்காது.

அதிமுகவை வீழ்த்த திமுக நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. ஆனால் திமுக கூட்டணி பலத்தை நம்பியிருக்கிறது.
திமுக கூட்டணியை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறது. கூட்டணி தலைவர்கள் கைவிட்டால், திமுக கீழே விழுந்துவிடும்.

அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டன் கூட உயர் பதவிக்கு வர முடியும்
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அடிக்கடி சேலம் வருகிறார்கள். எத்தனை முறை வந்தாலும் சேலம் அதிமுகவின் கோட்டை தான்.

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் ஸ்டாலினுடைய சாதனை. இதைத்தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. மீண்டும் மன்னராட்சியை திமுக கொண்டு வந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

“எடப்பாடி பழனிசாமி எப்படி பதவிக்கு வந்தார் என்று உதயநிதி பேசியிருக்கிறார். அவருடைய வயதுக்கு மேல் எனக்கு அனுபவம் இருக்கிறது. கிளை கழக செயலாளராக இருந்து 50 ஆண்டு கால இந்த கட்சிக்காக பாடுபட்டதால்தான் எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது. சும்மா கிடைக்கவில்லை.

ஆனால் உதயநிதிக்கு எப்படி பதவி கிடைத்தது… கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்ற அடிப்படையில் தான் கிடைத்தது.

1989ல் ஸ்டாலினும் எம்.எல்.ஏ தான்… நானும் எம்.எல்.ஏ.தான். எடுத்தவுடன் பதவி கிடைக்கவில்லை. படிபடியாகத்தான் உயர்ந்தேன்.

ஆனால் உதயநிதி எம்.எல்.ஏ.ஆகி ஒரு வருடத்தில் அமைச்சர் பதவி கொடுத்தார்கள். அடுத்த ஒன்றரை வருடத்தில் துணை முதலமைச்சர் பதவி கொடுத்தார்கள். ஏன் அவசர அவசரமாக பதவி கொடுக்க வேண்டும்.

ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதால் உதயநிதிக்கு பதவி கொடுத்திருக்கிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

“அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்”: ஸ்டாலின், சந்திரபாபுவின் கருத்துக்கு மக்களின் பதில்!

காமன்வெல்த் 2026 : 9 போட்டிகள் அதிரடி நீக்கம்… இந்தியாவுக்கு பின்னடைவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel