முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுகவின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், நேற்று நாமக்கல்லில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி கனவு கண்டுகொண்டிருக்கிறார். அவர் பேசுவதை மக்கள் காமெடியாக எடுத்துக்கொள்கிறார்கள். திமுகவின் மதிப்பு குறையவில்லை. அதிமுகவின் மதிப்புதான் குறைந்துவிட்டது என்று கூறியிருந்தார் ஸ்டாலின்.
இந்நிலையில் சேலம் வனவாசியில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினை தாக்கி பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு இந்த இயக்கம் காணாமல் போய்விடும் என்று கலைஞர் கனவு கண்டார். ஆனால் அது கானல் நீராக போய்விட்டது.
அதிமுகவை பொறுத்தவரை மக்கள்தான் வாரிசு. அதிமுக 30 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சி செய்தது.
நேற்று நாமக்கல்லில் நமது கட்சியை பற்றி ஸ்டாலின் பேசும் போது எடப்பாடி பழனிசாமி கனவு கண்டு கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அவர்தான் பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார். பகல் கனவு பலிக்காது.
அதிமுக சரிந்துவிட்டது. திமுக செல்வாக்குமிக்க கட்சியாக இருக்கிறது என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதே நாடாளுமன்றத் தொகுதியில் 2019 தேர்தலில் 3 லட்சம் வாக்குவித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்தது. ஆனால் இந்த தேர்தலில் 30,000 வாக்குவித்தியாசத்தில் தான் தோல்வியுற்றோம். அப்படியானால் யாருக்கு சரிவு ஏற்பட்டுள்ளது?
திமுகவுக்குதான் சரிவு, அதிமுக செல்வாக்காக உள்ளது. 2019 பொதுத் தேர்தலில், நாமக்கல்லில் 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட அதிமுகவால் வெற்றி பெறமுடியவில்லை.
ஆனால் இந்த முறை 6 சட்டமன்ற தொகுதியில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆக அதிமுக செல்வாக்கு உயர்ந்திருக்கிறது.
2019 தேர்தலில் அதிமுக மொத்தமாக 2 சட்டமன்ற தொகுதியில் தான் வெற்றி பெற்றது. 2024 தேர்தலில் 10 தொகுதிகளில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற்றிருக்கிறோம்.
2019ல் பலமான கூட்டணி அமைத்தோம் பிரதமர் யார் என்று அறிவித்தோம். ஒவ்வொரு முறையும் தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டணி கட்சியை பொருட்படுத்தாமல் எட்டி உதைத்துவிடுகிறார்கள். அதனால் தனித்து நின்றோம்.
2019 தேர்தலை விட 2024 தேர்தலில் ஒரு சதவிகிதம் கூடுதலான வாக்குகளை அதிமுக பெற்றிருக்கிறது. ஆனால் திமுகவின் வாக்கு 33.92 சதவிகிதத்தில் இருந்து 26.50 சதவிகிதமாக குறைந்துவிட்டது. அக்கட்சிக்கு 7 சதவிகித வாக்குகள் குறைவாக கிடைத்தது.
ஆனால் மக்களை குழப்பி திமுகவுக்கு செல்வாக்கு இருப்பதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்று வரும்போது நாடாளுமன்றத்தில் நம்முடைய மக்கள் பிரச்சினையை அழுத்தம் இல்லாமல் எடுத்துவைக்க தனித்து நின்றோம்.
ஸ்டாலினை பொறுத்தவரை கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் அமைச்சராக வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்காக அவர் கூட்டணி வைக்கவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வேண்டும் என்பதற்காக கூட்டணி வைக்கிறார்” என்று விமர்சித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
போலி நீதிமன்றம்… போலி நீதிபதி… இப்படியும் நடக்குமா?
சென்னை பெண்களுக்காக ‘பிங்க் ஆட்டோ’ : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?