sdpi party members meet eps
பாஜகவுடன் கூட்டணியில் இருந்து வெளியேறியதில் எந்த மாற்றமும் இல்லை என்று எஸ்டிபிஐ கட்சியினரிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்திருக்கிறார்.
‘வெல்லட்டும் மதச்சார்பின்மை’ என்ற தலைப்பில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி மாநாடு நடத்தப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி, எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், பொதுச் செயலாளர்களான நிஜாம் மொய்தீன், உமர் பாரூக், செயலாளர் ஏ.கே. கரீம், பொருளாளர் அமீர் அம்சா, செயற்குழு உறுப்பினர் முகமது ரஷீத் ஆகியோர் சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் உடனிருந்தார்.
12.30 மணியில் இருந்து 1.15 மணி வரை சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
கடந்த ஜனவரி 7ஆம் தேதி நடந்த மதுரை மாநாட்டில் சிறப்பு விருந்தினராக எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டதற்காக, மரியாதை நிமித்தமாக சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது நடப்பு அரசியல் விவகாரங்கள் பற்றியும் அவர்கள் பேசியுள்ளனர்.
இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, “மதுரை மாநாட்டில் கலந்துகொண்டதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவிக்க முடிவு செய்தோம். ஆனால் அவர் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை.
இந்நிலையில் ஜனவரி 29ஆம் தேதி அவரை சந்தித்து பேசினோம். அப்போது, பாஜகவில் இருந்து நீங்கள் வெளியே வந்துவிட்டாலும், திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் அதிமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணியில் இருக்கிறது, கள்ளக் கூட்டணியில் இருக்கிறது என்று சொல்லி வருகிறார்கள் என்பதை அவரிடம் சுட்டிக் காட்டினோம்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகியது விலகியதுதான். ஏற்கனவே இதுகுறித்து அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் செப்டம்பர் 18ஆம் தேதி அறிவித்தார். இருந்தாலும் திமுககாரர்கள் அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று சொன்னார்கள்.
செப்டம்பர் 25ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தீர்மானம் போட்டு அறிவித்தோம்.
அதைதொடர்ந்து உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டோம். இதில் இனி எந்த மாற்றமும் இல்லை. திமுக சிறுபான்மையினரை ஏமாற்றுகிறது என உங்கள் கூட்டங்களில் நீங்களும் சொல்லுங்கள்’ என்றார்.
தொடர்ந்து, ‘இங்க பாருங்க நீங்க அயோத்தி ராமர் கோயிலுக்கு போனதா ஒரு போட்டோவை எடிட் செய்து போட்டிருக்கிறார்கள். இதை பார்த்தீர்களா’ என எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் காட்டினார்கள்.
அதற்கு நெல்லை முபாரக், ‘அயோத்தியில் ராமர் கோயில் திறந்த ஜனவரி 22ஆம் தேதி தான் நீங்கள் கன்னியாகுமரி வந்திருந்தீர்கள். அங்கு ஒரு திருமணத்தில் கூட நாம் இருவரும் சந்தித்தோம். ஆனால் எப்படி பரப்புகிறார்கள் பாருங்கள்’ என்றார்.
தொடர்ந்து இந்த சந்திப்பின் போது உடனிருந்த எஸ்.பி.வேலுமணி “அண்ணன் ஒரு முடிவு எடுத்துட்டா… எக்காரணம் கொண்டும் பின் வாங்கமாட்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகளில் 69 சதவிகிதத்தை திமுக வாங்கியிருந்தது. அப்போது, அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருந்தது. அதனால் தான் திமுக இவ்வளவு சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்றது.
இப்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதால் திமுகவினருக்கு பயம் வந்துவிட்டது. நீங்கள் தேர்தல் குழுக்களை அமைத்துவிட்டு வாருங்கள்… என்னென்ன தொகுதி, எத்தனை தொகுதி என்றெல்லாம் பேசிக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
இதனால் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்ற 100 சதவிகித உறுதியோடு எஸ்டிபிஐ கட்சியினர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து புறப்பட்டனர்” என்கிறார்கள் நம்மிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள்.
வேந்தன் பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சர்ச்சையான சண்டிகர் மேயர் தேர்தல் : நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல்!
கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் ஐசியூவில் அனுமதி… விமானப்பயணத்தில் நடந்தது என்ன?
sdpi party members meet eps