சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தொகுதிகள் தோறும் அதிமுக பொதுச்செயலாளர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பது பற்றி முன்னாள் அமைச்சர் வேலுமணி அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 234 தொகுதிகளுக்கும் தான் சுற்றுப் பயணம் செய்யப் போவதாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார். பொங்கலுக்குப் பிறகு எடப்பாடியின் சுற்றுப் பயணம் திட்டமிடப்பட்டு அதற்கான பாயின்ட் நிர்ணயிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் கோவையில் இன்று (ஜனவரி 23) அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “கோவை மாவட்டம் ராசியான மாவட்டம். நாம் 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை கொடுத்துள்ளோம். அதனால் தான் எடப்பாடியார் கோவையில் சுற்று பயணத்தை துவங்குகிறார்.
வரும் 31ஆம் தேதி சரியாக 3 மணிக்கு ஆர்.எஸ்.புரத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிடுவார். அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுக்க வேண்டும். இந்த பகுதியில் பொதுச்செயலாளர் நடந்தே வருவார். அவர் நிறைய திட்டங்களை வைத்திருக்கிறார்.

அங்கு எல்லோரும் வந்துவிட வேண்டும், பொதுமக்களை அழைத்து வர வேண்டும்.
ஆரம்பமே ஆர்.எஸ்.புரம் தான். அதற்கடுத்து தெற்கு தொகுதியில் வந்து பேசுவார். இறுதியாக சிங்காநல்லூர் பகுதியில் பேசுவார். அடுத்த நாள் காலை முக்கியஸ்தர்களை சந்திக்க இருக்கிறோம்.
அன்றைய தினம் மாலை வடக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.
234 தொகுதிக்குமான சுற்றுப்பயணத்தை கோவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார்” என்று அறிவித்தார்.
மேலும் அவர், “பணத்தை மட்டும் வைத்து ஜெயித்து விடலாம், தேர்தல் நேரத்தில் மட்டும் திட்டங்களை அறிவித்து ஜெயித்துவிடலாம் என்று திமுக நினைக்கிறது. அது நடக்காது. அதிமுக ஆட்சியில் அமர்வது உறுதி. 2026ல் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர். திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஆட்சிக்கு வராது” என்று கூறினார்.

தொடர்ந்து கோவைக்கு அதிமுக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது என்றும் திமுக எதுவுமே செய்யவில்லை என்றும் கூறிய வேலுமணி, ”இங்கு இருக்கக்கூடியவர்கள் என்ன நினைக்கிறீர்களோ அந்த கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைப்பார். எனவே 31ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி வரும்போது அனைவரும் வந்து சிறப்பிக்க வேண்டும். அதேபோல பிப்ரவரி 9ஆம் தேதி விவசாயிகள் மாநாடு நடைபெறும், அதற்கும் அனைவரும் வர வேண்டும் ” என கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப் பயணத்தை கோவை மாவட்டத்தில் இருந்துதான் தொடங்குகிறார் என்பதை மின்னம்பலத்தில் ஜனவரி 12 ஆம் தேதியே வெளியிட்டிருந்தோம். டிஜிட்டல் திண்ணை: கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி… பிரிந்து நிற்கும் எம்எல்ஏக்கள்!
செய்தியில், 11 ஆம் தேதி நடந்த மா.செ.க்கள் கூட்டத்தில் எடப்பாடி பேசியதை நாம் வெளியிட்டிருந்தோம்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “சுற்றுப்பயணத்தை எங்கிருந்து ஆரம்பிக்கப் போகிறீர்கள் என்று என்னிடம் நீங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பல நிர்வாகிகள் தங்களது பகுதியில் இருந்தும் தங்களது மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று என்னிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
நான் சுற்றுப்பயணத்தை தம்பி வேலுமணியின் மாவட்டத்தில் இருந்து ஆரம்பிப்பதாக இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.
மின்னம்பலத்தில் வெளியிட்டபடியே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணம் கோவையில் இருந்து தொடங்குவதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் வேலுமணி.