ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை திமுக மீறியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகுவை சந்தித்து புகார் மனு அளித்தார்.
இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்தில் இன்று (பிப்ரவரி 3) மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பிறகு 6 மாத காலம் அவகாசம் உள்ள நிலையில், அவசர அவசரமாக இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள நான்கில் ஒரு பகுதி வாக்காளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இல்லை. கிட்டத்தட்ட 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை.
இதனை தெரிந்தே மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் செய்திருக்கிறார். ஒவ்வொரு பூத்திலும் 15 முதல் 20 வாக்காளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இறந்த வாக்காளர்கள் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்படவில்லை. அதன்படி 5000 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. திமுக அரசு சொல்வதை தேர்தல் அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நேர்மறையாக இந்த தேர்தல் நடைபெறாது. திமுக தனது குண்டர்களை வைத்து தொகுதியில் இல்லாத 45 ஆயிரம் வாக்காளர்களின் வாக்குப்பதிவை செய்ய முயற்சி செய்து வருகிறது.
நேர்மையாக வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றால் தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும். திமுக அரசின் ஏவல் துறையாக செயல்படும் காவல்துறையை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் பணிகளில் பயன்படுத்தாமல் மத்திய காவல் படை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.” என்று தெரிவித்தார்.
செல்வம்
“பாஜகவுடன் எச்சரிக்கையுடன் இருக்கிறோம்”: எடப்பாடி தரப்பு!
ஓபிஎஸ் இபிஎஸ் சந்திப்பு: அண்ணாமலையின் அசைன்மெண்ட் என்ன?