வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமில் அதிமுகவின் நண்பர் ஷேர் பண்ணி இருந்த அந்த போட்டோ கண்ணில் பட்டது. ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கும் நிலையில் அதுபற்றி டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகார அமைச்சகத்திடம் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு வந்திருந்த அழைப்பு கடித போட்டோ தான் அது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்திற்கும் இடையே சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார் எடப்பாடி. இந்தப் பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில்தான்… எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசின் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனுப்பிய கடிதம் அதிமுகவுக்குள் பரபரப்பை உண்டு பண்ணியது.
அதாவது ஜி 20 அமைப்புக்கு 2022 டிசம்பர் முதல் 2023 நவம்பர் வரை இந்தியா தலைமை தாங்க இருக்கும் நிலையில் அடுத்த வருடம் ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்தவிருக்கிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை குடியரசுத் தலைவர் மாளிகையில் டிசம்பர் 5ஆம் தேதி மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது.
இதற்காக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்ட சுமார் 40 கட்சிகளின் தலைவர்களை மத்திய அரசு அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைத்தது. திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதையும் அவர் டெல்லி செல்கிறார் என்பது மின்னம்பலத்தில் ஏற்கனவே செய்தியாக வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் இருந்து விசிக தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் அதிமுகவின் தலைமை கழகத்தில் இருந்து டிசம்பர் 4ஆம் தேதி பகல் அந்த கட்சியின் நிர்வாகிகளுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் இந்த ஜி 20 ஆலோசனைக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்ட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் அதை உடனடியாக சமூக தளங்களில் பகிர்ந்தார்கள்.
அந்த கடிதத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிடப்பட்டிருந்தது எடப்பாடி தரப்பினரை மிகுந்த உற்சாகத்திற்கு ஆளாக்கியது.
நவம்பர் மாதம் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் அடுத்தடுத்த நாட்களில் தமிழகம் வந்து சென்றார்கள். அப்போது அவர்களை தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் பகீரத பிரயத்தனம் செய்தார்கள். ஆனால் யாரும் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியவில்லை.
99 சதவீத அதிமுக தன்னிடம் தான் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறிவரும் நிலையில்… நாங்கள்தான் அதிமுக என்று பன்னீர்செல்வமும் கூறி வருகிறார். இந்த நிலையில் பாஜகவின் ஆதரவை பெறுவதில் இருவருக்கும் விறுவிறுப்பான போட்டி நடைபெற்று வருகிறது.
மழை வெள்ளத்தை பார்வையிடுவதற்கு மயிலாடுதுறை சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷா எப்போது வந்தாலும் அவரை சென்று சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தார். அதிமுக பாஜகவை எதிர்க்கத் தயாராகி விட்டதா என்று இதன் மூலம் யூகங்கள் கிளம்பின. ஆனால் அமித்ஷா கலந்து கொண்ட அந்த தனியார் நிகழ்ச்சிக்கு தன்னால் வர இயலவில்லை என்று தொலைபேசி மூலம் அமித்ஷாவிடம் தெரிவித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
இந்தத் தகவலும் அப்போதும் மின்னம்பலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல எஸ்.பி.வேலுமணி மூலம் வானதி சீனிவாசன் உள்ளிட்ட டெல்லி பாஜக பிரமுகர்களிடமும் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார் எடப்பாடி.
இதற்கிடையே பாஜகவை பற்றி அதிமுகவில் சிலர் விமர்சனம் செய்யத் தொடங்க அவர்களை அழைத்த எடப்பாடி இப்போதைக்கு பாஜகவை விமர்சனம் ஏதும் செய்ய வேண்டாம் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி கோவையில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்திருக்கிறார்.
வானதி சீனிவாசன் இது குறித்து மாநில தலைமையிடம் கலந்து ஆலோசித்துள்ளார். தனக்கு நெருக்கமான தேசிய பிரமுகர்களிடமும் ஆலோசித்துள்ளார். அதன் பிறகு அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன், ‘தேசிய அளவில் பாஜக பெரிய கட்சி. அதிக மாநிலங்களில் ஆட்சியில் இருக்கக்கூடிய கட்சி. ஆனால் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பின்னணியில் தான் ஜி 20 மாநாட்டுக்கு மோடியிடம் இருந்து எடப்பாடிக்கு அழைப்பு வந்துள்ளது. ‘கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மினி சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்தித்தார். அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையின் போது கூட பாஜகவுக்கு ஐந்தே ஐந்து இடங்களை தான் கொடுத்தார்.
இப்போதும் எடப்பாடி பழனிசாமி வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி என்று அமைந்தால் பாஜகவுக்கு ஐந்து முதல் எட்டு இடங்கள் வரை கொடுப்பதாகத் தான் இருக்கிறார். ஆனால் பாஜக தமிழ்நாடு புதுச்சேரியில் இருக்கும் 40 தொகுதிகளில் 20 தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் என்று எடப்பாடியிடம் வலியுறுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமிடம் இருந்து வரும் எம்.பி. தேர்தலில் அதிகபட்ச இடங்களை கூட்டணியில் பெறுவதற்கு பாஜக தயாராகிவிட்டது.
ஒரு பக்கம் எடப்பாடியின் சகாக்களான விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வருமான வரித்துறை மூலம் கிடுக்கு பிடி போட்டு வரும் பாஜக இன்னொரு பக்கம் எடப்பாடி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று மத்திய அரசாங்கம் அங்கீகரிக்கிறது என்பதை இந்த அழைப்பின் மூலம் உணர்த்தி உள்ளது.
எடப்பாடிக்கு அனுப்பப்பட்ட இந்த அழைப்பை பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் அதிர்ச்சியும் குழப்பமுமாகவே பார்த்து வருகிறார்கள். எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடம் இது பற்றி பேசும்போது, ‘ஒரு சந்தர்ப்பத்தில் சிரிக்கிறார்கள் ஒரு சந்தர்ப்பத்தில் முறைக்கிறார்கள். பாஜக எடப்பாடியை விட்டு பிடிப்பது போல தெரிகிறது’ என்கிறார்கள்.
ஆக வரும் மக்களவைத் தேர்தலில் 20 இடங்களில் போட்டியிடுவதற்கு எடப்பாடி எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்பதற்கான அச்சாரமாகவே இந்த அழைப்பு பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுகவை நம்பி தான் பாஜகவே தவிர பாஜகவை நம்பி அதிமுக அல்ல என்ற முடிவுக்கு பாஜக வந்துவிட்ட பிறகு அதிகபட்ச தொகுதிகளை கேட்டு பெறுவதற்காக செய்யும் ராஜதந்திரங்களில் இதுவும் ஒன்று”என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
இமாச்சல், குஜராத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?
துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!