திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் இன்று (செப்டம்பர் 10) காலை விஐபி தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்தார்.
கடந்த 2 மாத காலமாக தமிழக அரசியல் களத்தில் அதிமுக கட்சியின் உட்கட்சி பூசல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தலைமை பதவியை கைப்பற்ற ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இருதரப்பும் உச்ச நீதிமன்றத்தின் படியேறி உள்ளன.
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். முதன்முறையாக கடந்த 8ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பொதுச் செயலாளராக சென்றார். அங்கு அவருக்கு கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி!
இதனை தொடர்ந்து நேற்றிரவு திருப்பதிக்கு தனது குடும்பத்துடன் புறப்பட்டார். அவருக்கு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிமுக அமைப்புச் செயலாளர் அரி தலைமையில் ஏராளமான தொண்டர்கள் மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி கிரீடம் மற்றும் வெள்ளி வேல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். கோயிலில் இருந்து வெளியே வந்த அவர் தேங்காய் உடைக்கும் இடத்திற்கு சென்று கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டார்.
விரைவில் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு விசாரணை வருவதை ஒட்டி அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
காத்திருக்கும் ஓபிஎஸ்!
அதேவேளையில் அதிமுக அலுவலகத்துக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் செல்வதற்கு ஓ.பன்னீர்செல்வம் போராடி வருகிறார். உரிய சட்ட அனுமதி பெற்று வந்தால் அனுமதி வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ள நிலையில், அவரும் தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதே சமயத்தில் ஓபிஎஸ் தரப்பில் நிச்சயம் அவர் தலைமை அலுவலகத்துக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா