2023 பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்காவிடில், பாதிக்கப்பட்ட நெசவாளர்களை சேர்த்துக்கொண்டு போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும். இதற்காக 6 மாதங்களுக்கு முன்னதாகவே நெசவாளர்களுக்குத் தமிழக அரசு ஆர்டர் கொடுக்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாகக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 29) விடுத்துள்ள அறிக்கையில், “தலைவலி தீருவதற்குள் வயிற்று வலி வந்த கதையாகக் கரும்பு பிரச்சினை முடிவதற்குள் விலையில்லா வேட்டி சேலை பிரச்சினை பூதாகரமாக வடிவெடுத்துள்ளதாகச் செய்திகள் வலம் வருகின்றன.
2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி சேலை நெய்யும் பணி இந்த கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் ஆட்சியின் அகோர பசியால் முடங்கிப் போயிருப்பதாக நெசவாளர்களும் கூட்டுறவு சொசைட்டிகளைச் சார்ந்தவர்களும் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
ஜூலை மாதமே வழங்க வேண்டிய துணி நெய்யும் உத்தரவுகள் அக்டோபர் மாதம் தான் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நூல் நவம்பர் இறுதியிலும் டிசம்பர் முதல் வாரத்திலும் தான் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் துணி நெய்வதற்கே உதவாத தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கி உள்ளது. துணி நெய்யும் போது தறியில் நைந்து போன நூல் அறுந்து துண்டு துண்டாக விழுவதால் துணி நெய்ய முடியாமல் நெசவாளர்கள் பரிதவிக்கின்றனர்.
இதனால் 90 சதவிகித நெசவாளர்கள் தங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட நூல் பெயர்களை அரசுக்குத் திருப்பி அனுப்பி வருவதாகவும் தரமான நூல் தந்தால் தான் வேட்டி சேலை தயாரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாகத் தைப்பொங்கலுக்கு ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் உடுக்க உடை என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் கனவு திட்டம் பாழாகும் சூழ்நிலையை இந்த ஆக்டோபஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளர்களையும் ஏமாற்றப்படும் ஏழை எளிய மக்களையும் ஒன்றிணைத்து அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
பிரியா
பார்வையற்றவரிடம் ரூ. 3 லட்சம் மோசடி: 2 பெண்கள் கைது!
ரிஷப்பண்ட் தான் காரணம்..குட்டி ஸ்டோரி சொன்ன அஷ்வின்