தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்து பேசியுள்ளார்.
இன்று (நவம்பர் 30) காலை சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,
“முதல்வர் ஸ்டாலின் அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் பாதாளத்துக்கு சென்று விட்டது. தொழில் வளம் எதுவும் வரவில்லை. தமிழகம் ஏற்றம் பெறவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக இருப்பதாக குடியரசு தலைவர் கைகளால் விருதும் பெற்றிருக்கிறோம்.
யார் தவறு செய்தாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை.
மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை சுற்று வட்டார பகுதியில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்திருக்கிறது என்று தெரிவித்தேன். ஆனால் இதற்கு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 36 மணி நேரத்தில் 12 கொலைகள் தான் நடந்திருக்கிறது என்று தெரிவித்தார்கள்.
12 கொலைகள் நடந்திருக்கிறது என்று சொன்னால் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை முதல்வர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தற்போது தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக உள்ளது. 2138 பேர் பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்ததாக கண்டறியப்பட்டுள்ளதாக மானிய கோரிக்கையின் போது முதல்வர் தெரிவித்திருந்தார். ஆனால், 148 பேர் தான் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். மற்றவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை.
இது தொடர்பாக சட்டமன்றத்திலேயே நான் கேள்வி எழுப்பி இருக்கிறேன். ஆனால் இதற்கு முதல்வர் பதிலளிக்கவில்லை. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதால் தான் காவல்துறை அதிகாரிகளால் போதை பொருளை தடை செய்ய முடியவில்லை.
இன்று கூட ராமநாதபுரம் மாவட்டத்தில் நாட்டு படகில் 360 கோடி ரூபாய் மதிப்பிலான கொகைன் என்ற போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் திமுக கவுன்சிலர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
காவல்துறை மற்றும் உள்துறையை கையில் வைத்திருக்கக்கூடிய முதலமைச்சர் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கையை எடுக்கவில்லை. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் இதில் ஈடுபடுவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
திமுக பொதுக் குழுவில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கட்சிக்காரர்களின் நடவடிக்கையால் என்ன நடக்குமோ என பயந்து கொண்டே தினமும் கண் விழிப்பதாக கூறியுள்ளார். அதன்படி திமுகவைச் சேர்ந்தவர்கள் போதை பொருள் விவகாரத்தில் தலையிடுவது தெள்ளத் தெளிவாகி விட்டது.

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என்றும் இதனால் சிலருக்கு வயிறு எரிகிறது என்றும் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் மக்களுக்கு தான் வயிறு எரிகிறது.
கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, ஆகியவை அன்றாட நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பத்திரிகைகளில் வருகிற அன்றாட செய்தியை வைத்து தான் நாங்கள் சொல்லுகிறோம்.
இது போன்ற பிரச்சினைகளை ஊடக பத்திரிகைகள் வாயிலாக அல்லது அறிக்கையாக நான் வெளியிடுகிறேன்.
இதன் உண்மை தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது தான் முதல்வரின் கடமை. எதிர்க்கட்சியின் கடைமையை நாங்கள் முழுமையாக நிறைவேற்றுகிறோம்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் தனது கடைமையை செய்ய தவறிவிட்டார். எதிர்க்கட்சியை பழிவாங்கும் நோக்கிலே அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரே தவிர நாட்டு மக்களின் நலனுக்காக செயல்படவில்லை.
பத்து நாட்களுக்கு முன்பு நடைபயிற்சி செல்லும்போது, அமைச்சரை பார்த்து கலக தலைவன் படம் எப்படி ஓடுகிறது என்று முதல்வர் கேட்கிறார். அதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், நன்றாக ஓடுகிறது என்கிறார்.
இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா?. நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்காமல் வீட்டு மக்களைப் பற்றி சிந்தித்து கொண்டு இருக்கிறார்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய பல அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இருப்பு இல்லை. இதைப் பற்றி எல்லாம் கேட்காமல், தன்னுடைய மகன் நடித்த திரைப்படம் சிறப்பாக ஓடி கொண்டிருக்கிறதா, வசூல் எப்படி இருக்கிறது? என கஜானா நிரம்புமா என்ற எண்ணத்தில் எல்லாம் கேட்டால் நாட்டு மக்களுக்கு வயிறு எரியத்தான் செய்யும்.
பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முதல்வர் வைத்திருக்கிறார். ஆனால், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம், வேலை இல்லா திண்டாட்டம் குறைப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கினோம், தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி மூன்று லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீட்டை ஈர்த்து லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கினோம், 2021 அதிமுக ஆட்சி வரை விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இருந்தது,
அதிமுக ஆட்சியில் சாதாரண குடும்பத்திற்கு மாதத்திற்கு 10,000 ரூபாய் இருந்தால் போதும். ஆனால் தற்போது 13,500 ரூபாய் தேவைப்படுகிறது.
பொம்மை முதலமைச்சர் ஆட்சியில் இருப்பதால் விலைவாசி உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கஜா புயலின் போது, அதன் அடிச்சுவடே இல்லாத வகையில் பார்த்துக்கொண்டோம். வறட்சியின் போது நிவாரணம் கொடுத்தோம்.
பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே அதிக காப்பீட்டை அதிமுக அரசுதான் பெற்று தந்தது. விவசாயிகள் கடனையும் ரத்து செய்தோம்” என்றார்.
அம்மா உப்பு, கிளினிக், தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம் என அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக அரசு கைவிட்டு விட்டது என்று குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி,
11 மருத்துவ கல்லூரிகளை கட்டியுள்ளோம், மிகப் பெரிய கால்நடை பூங்காவை கட்டியுள்ளோம், ஆறு மாவட்டங்களை உருவாக்கினோம் என்று பல்வேறு திட்டங்களை குறிப்பிட்டு பேசியவர் இதையெல்லாம் போய் பாருங்கள் ஸ்டாலின் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ” 10 ஆண்டு காலத்தில் தமிழகம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்று கூறும் ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுகிறேன். எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் வருகிறேன். அதிமுக ஆட்சியில் எந்த அளவுக்கு திட்டங்கள், பணிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்பதை நான் சொல்கிறேன்.
அதே வேளையில் திமுகவின் 18 மாத ஆட்சிக் காலத்தில் என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள் அதன் மூலம் மக்கள் எப்படி பயன் அடைந்தார்கள் என்பதை நீங்கள் விளக்க வேண்டும். மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள்” என்று சவால் விடுத்தார்.
மதுரை எய்ம்ஸ் குறித்து பேசிய அவர், “இது மத்திய அரசு திட்டம். 38 திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.கள் உள்ளனர். இவர்கள் மத்தியில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டும். நாடாளுமன்றத்தில் இவர்கள் குரல் கொடுப்பதில்லை” என்று குற்றம்சாட்டினார்.
பிரியா
“சாலைகளுக்காக நிலங்களை கையகப்படுத்திதான் ஆகவேண்டும்” –அமைச்சர் எ.வ.வேலு
மழையை எதிர்பார்த்து மிரட்டிய நியூசிலாந்து… தொடரை இழந்தது இந்தியா