சென்னையில் பெரியார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை செய்யவிடாமல் அந்த படத்தை கையோடு தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று(செப்டம்பர் 17) கொண்டாடப்பட்டு வருகிறது.
பல தலைவர்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலைக்கும், அவரது திருவுருவப்படத்திற்கும் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னையில் அண்ணா மேம்பாலம் கீழ் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் மரியாதை செலுத்த ஏதுவாக மலரால் அலங்கரிக்கப்பட்ட பெரியார் படம் ஒன்றை அவரது ஆதரவாளர்கள் எடுத்து வந்தனர்.
அவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், அமமுக நிர்வாகி செந்தமிழனும் மரியாதை செலுத்த வந்தனர்.
இதைப்பார்த்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், பெரியார் படத்திற்கு இபிஎஸ் மரியாதை செலுத்திய உடனேயே அங்கிருந்த படத்தை கையோடு தூக்கிச் சென்றனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செய்வதற்கு அங்கு பெரியார் படம் எதுவுமில்லாமல் போனது.
இதையடுத்து அமமுக நிர்வாகிகள் ஓடிச் சென்று வேறொரு பெரியார் படத்தை கொண்டு வைத்து மரியாதை செய்தனர். அவர்கள் பன்னீர்செல்வம் மரியாதை செலுத்துவதற்கு ஏதுவாக அந்தப்படத்தை அங்கேயே விட்டுச்சென்றனர்.
இதன்பிறகு பன்னீர்செல்வம், பெரியார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டுச் சென்றார். எடப்பாடி பழனிசாமி, பெரியார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு அதை கையோடு எடுத்துச் சென்ற நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுக கட்சி யாருக்கு என்ற போட்டி காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், என 2 அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பெரியாருக்கு மரியாதை செய்யும் இடத்தில் கூட அவர்கள், தங்களது விருப்பு வெறுப்பை காட்டியிருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
கலை.ரா
பெரியார் உலக மக்களுக்கான தலைவர் : முதல்வர் ஸ்டாலின்
இரண்டே வாரம்தான்… அதானியின் அடுத்த சாதனை!