பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்திற்காகத் தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவித்திருந்தது. அந்த பரிசுத் தொகுப்பில் ரூ. 1000 ரொக்கப் பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதில் கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சார்பில் ஜனவரி 2 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 28) பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழக அரசின் இந்த முடிவை விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக சார்பில் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ”பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது. கழகத்தின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி.
பொதுமக்கள் நலனிலும், விவசாயப் பெருங்குடி மக்கள் நலனிலும் சிறிதும் அக்கறை இல்லாத திமுக அரசு, வரும் பொங்கல் திருநாளையொட்டி அளிக்க இருந்த பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்காததைக் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன அறிக்கைகள் வெளியிட்டதோடு, பொங்கல் தொகுப்புடன் செங்கரும்பையும் சேர்த்து வழங்குமாறு பேட்டிகள் வாயிலாக திமுக அரசுக்கு நான் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தேன்.
மேலும், கழக விவசாயப் பிரிவின் சார்பில் வருகின்ற 2.1.2023 அன்று திருவண்ணாமலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் வலியுறுத்தல் காரணமாக, திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என இன்று (28.12.2022) அறிவித்துள்ளதால், கழக விவசாயப் பிரிவின் சார்பில் 2.1.2023 அன்று திருவண்ணாமலையில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிவரும் காலங்களிலும் திமுக அரசு, மக்கள் நலனிலும், விவசாயிகள் நலனிலும் அக்கறை இல்லாமல், மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடும்போது, மக்களுக்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் துணை நிற்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
ராகுல் யாத்திரை: அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்!
பொன்னியின் செல்வன்- 2: லைகா கொடுத்த அப்டேட்!