எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணி பிரிவுக்கு பிறகு இருகட்சியினரிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக போட்டியிட்டால் 4ஆவது இடத்துக்கு போயிருக்கும் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அண்ணாமலை வந்த பிறகுதான் பாஜகவுக்கு பலம் வந்ததுபோல் மாயையை உருவாக்குகிறார். அவர் மெத்த படித்தவர். மிகப் பெரிய அரசியல் ஞானி. அதனால் தான் அவரது கணிப்பு அப்படி உள்ளது” என்று விமர்சித்திருந்தார்.
எடப்பாடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “சில தலைவர்கள் தங்களுடைய சுய லாபத்திற்காக அதிமுகவை அழித்துகொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
உடன் இருக்கும் இருவரை பத்திரிகையாளர்களிடம் பேச வைத்து எப்படியாவது அதிமுகவை காப்பாற்றிவிடலாம் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கனவு கண்டு கொண்டிருக்கிறார்.
அதிமுகவில் சுய லாபத்துக்காக செய்யும் அரசியலால் அக்கட்சி அழிந்துகொண்டிருக்கிறது. நம்பிக்கை துரோகி என்று ஒருவரை சொல்ல வேண்டுமெனில் அது எடப்பாடி பழனிசாமிக்கு பொருந்தும்.
பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை டெல்லியில் தனக்கு அருகில் அமர வைத்தார். அக்கரைக்கு இக்கரை பச்சை என நினைத்து பாஜகவை வேண்டாமென ஒதுங்கிய எடப்பாடியை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பல இடங்களில் டெபாசிட்டை இழக்க வைத்தனர். ஒரு கின்னஸ் ரெக்கார்டு போல் அத்தனை இடங்களில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி என்னைப்பற்றி பேசுகிறார்.
கோவையில் வெறும் டெபாசிட் மட்டும்தான் வாங்கினார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறார். எடப்பாடியின் சரித்திரம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அதிமுக எத்தனை தோல்வியை சந்தித்துள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் பற்றிய ரகசியம் தெரியும், தெரிந்தும் பொய் சொல்கிறார் என்கிறார் எடப்பாடி. அந்த ரகசியம் என்ன….
எடப்பாடி பழனிசாமி என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசியபோது, ஈரோடு என்னுடையை சொந்த ஊர், கோட்டை … அதனால் நாங்கள் அங்கு போட்டியிடுகிறோம். ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் அவரிடம் சொல்லுங்கள் என என்னிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அப்போது கண்ணியமாக ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தொண்டர்கள் எல்லாம் ஒன்றாக ஓட்டுப்போட வேண்டும் என ஒதுங்கிகொண்டார். ஆனால், அவருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்.
தோல்வியடைவோம் என தெரிந்தும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது ஏன்?.
தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு புதுப் புது காரணங்கள் கண்டிபிடித்து கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஈரோட்டில் குளறுபடி நடந்தது அதுபோன்று விக்கிரவாண்டியில் நடக்கும். அதனால் தான் விக்கிரவாண்டியில் போட்டியிடவில்லை என்கிறார்.
இதே தேர்தல் ஆணையம்தான் 2026 சட்டமன்ற தேர்தலையும் நடத்தும், அதை எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா