ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்களை முறையாக வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 15) வலியுறுத்தியுள்ளார்.
சேலம் ஓமலூர் அருகேயுள்ள திண்டமங்கலம் கிராமத்தில் அதிமுக சார்பில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாட்டு வண்டியில் பயணம் செய்து நிகழ்ச்சி திடலுக்கு வந்தடைந்தார். 108 பானைகளில் பொங்கலிட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “கடந்த இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மக்கள் பணத்தை கொள்ளை அடித்தது தான் அவர்களின் சாதனை.
ஸ்டாலின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர் ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளையடித்ததாக, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
ஆட்சிக்கு வந்தபிறகு திமுக அரசு குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது. கொள்ளை அடித்த சில பேர் சிறைக்கு சென்றுள்ளார்கள். இன்னும் சில பேர் சிறைக்கு செல்வார்கள்.
நான் முதலமைச்சராக இருந்தபோது, தமிழகத்திற்கு பொற்கால ஆட்சியை தந்தோம். இன்றைக்கும் எங்கு சென்றாலும் அதிமுக சிறப்பாக ஆட்சி செய்தது என்று தான் மக்கள் பேசுகிறார்கள். அதேபோல திமுக அரசை எப்போது வீட்டுக்கு அனுப்புவோம் என்று மக்கள் குரல் எதிரொலித்துள்ளது. மிக மோசமான ஆட்சி நடக்கிறது என்று மக்கள் விமர்சிக்கிறார்கள்.
மக்களுக்கு எந்த நன்மையும் இல்லாமல் வேதனை தான் மிஞ்சியிருக்கிறது. ரேஷன் கடையில் பாமாயில் நிறுத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்களை முறையாக வழங்க வேண்டும்.
மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால் மக்கள் குறித்த எந்த அக்கறையும் திமுகவுக்கு இல்லை.
அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவது தான் திமுக ஆட்சியின் சாதனை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் திமுக அரசுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற நாம் அனைவரும் பாடுபட வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரபாஸ் அடுத்த படத்தின் டைட்டில் இதோ!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மீண்டும் முதல் பரிசு நோக்கி முன்னேறும் சாம்பியன்!