தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்பது அதிமுகவின் மக்களவை தேர்தல் உரிமை முழக்கம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 24) தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “‘தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம்’ என்பது அதிமுகவின் மக்களவை தேர்தல் உரிமை முழக்கம். பரப்புரையை இப்போதே தொடங்கிவிட்டோம்.
தமிழ்நாட்டில் இருந்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்கள் தமிழக மக்களின் ஒருமித்த கருத்துக் கொள்கையின் அடிப்படையில் செயல்படுவார்கள்.
தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்ற உறுதியை நான் கொடுக்கிறேன். எங்களுக்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் பதவி பலமோ, இங்கே இருக்கும் திமுக அரசை போல அதிகார பண பலமோ இல்லை. எங்களிடம் உறுதியாக இருப்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அருளாசியும் தொண்டர்களும் தான்.
அதிமுக தொண்டர்கள் இன்று முதல் இரவு பகல் பாராது அயராது உழைத்து இரட்டை இலை சின்னத்தின் வெற்றியை உறுதி செய்வோம்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். வேண்டுமென்றே சிலர் கூட்டணி குறித்து விஷமத்தனமான கருத்துக்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற காலம் விரைவில் வரும். தேர்தல் அறிவிக்கின்ற காலகட்டத்தில் எங்களுடைய கூட்டணி சிறப்பாக அமையும்.
அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை பொறுத்தவரை மக்களுக்காக உழைக்கின்றவர்கள். தமிழ்நாட்டின் உரிமைகள் நாடாளுமன்றத்தில் ஒலிக்க எங்களது வேட்பாளர்கள் குரல் எழுப்புவார்கள்.
கடந்த 2014-19 நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 37 பேர் மக்களுக்காக உழைத்தார்கள். மக்கள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள்.
காவிரி நதிநீர் பிரச்சனை வந்தபோது உச்சநீதிமன்றம் மூலம் சட்டப்போராட்டம் நடத்தி அதிமுக அரசு நல்ல தீர்வை பெற்றோம். அந்த தீர்ப்பை அமல்படுத்த காலதாமதம் செய்ததால், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37 பேர் நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் ஒத்திவைக்கின்ற அளவிற்கு அழுத்தம் கொடுத்தார்கள்.
எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மக்கள் நலன் சார்ந்த 16,619 கேள்விகள் நாடாளுமன்றத்தில் எழுப்பினர். அதேநேரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 9,695 கேள்விகள் மட்டுமே எழுப்பியுள்ளனர்.
அதனால் மத்திய அரசு பணிந்து நாங்கள் முன்வைத்த கோரிக்கையின் படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
திமுக கூட்டணியை சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு சார்ந்த என்ன பிரச்சனையை எழுப்பினார்கள்? நீட் தேர்வு, காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தை திமுக எம்.பிக்கள் முடக்கவில்லை.
பாஜகவுடன் முறைமுகமாக உறவு வைத்துள்ளோம் என்கிறார்கள். முன்பு கோ பேக் மோடி என்றார்கள் இப்போது வெல்கம் மோடி என்கிறார்கள். இதிலிருந்து பாஜகவுடன் யார் உறவு வைத்திருக்கிறார்கள்” என்பது தெரியும்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘சர்ருன்னு’ உயர்ந்த தங்கம்… 1 கிராம் எவ்வளவுன்னு பாருங்க!
ஜெயலலிதா பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!