மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதால் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அச்சத்தில் உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை திருவேற்காட்டில் இன்று (ஜூன் 14) செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பணம் பெற்ற வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 2 மாதங்களுக்குள் இந்த வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெண்டர்கள் விடப்படாமல் முறைகேடாக டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகிறது. அரசின் வருவாய் முதல்வரின் குடும்பத்திற்கு செல்கிறது. டாஸ்மாக்கில் கோடிக்கணக்கான ரூபாய்கள் இரண்டு ஆண்டுகளில் கொள்ளை அடித்துள்ளார்கள்.
இதுபோன்ற புகாரின் அடிப்படையில் தான் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக செந்தில் பாலாஜி நாடகம் அரங்கேற்றியிருக்கிறார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அச்சத்தில் உள்ளனர். முதல்வரும் அமைச்சர்களும் செந்தில் பாலாஜியை அக்கறை உணர்வுடன் மருத்துவமனைக்கு சென்று பார்க்கவில்லை. தங்களை பாதுகாப்பதற்காகவே அவரை பார்க்க சென்றுள்ளனர். செந்தில் பாலாஜி தார்மீக ரீதியாக பொறுப்பேற்று ராஜினாமா செய்தால் நல்லது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செல்வம்
செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் சர்ஜரி!