திமுக அரசு ஊழல் மூலமாக சம்பாதித்த பல ஆயிரம் கோடி ரூபாய்களை ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் படத்தயாரிப்புக்கு பயன்படுத்தியுள்ளார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ரெட் ஜெயண்ட் நிறுவனம் 2007-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது முதலமைச்சருடைய குடும்பத்தை சார்ந்த நிறுவனமாகும். உதயநிதி ஸ்டாலின் பங்குதாரராக இருந்து ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் 2010 முதல் 2020-ஆம் ஆண்டு வரை வருடத்திற்கு இரண்டு படங்கள் மட்டுமே தயாரித்து விநியோகம் செய்து வந்தது. 2021 – 2022 காலகட்டத்தில் ஆண்டுக்கு 50 படங்களை தயாரித்து விநியோகம் செய்து வருகிறார்கள். ஊழல் மூலமாக சம்பாதிக்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய்களை ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலமாக படத்தயாரிப்பிற்கு பயன்படுத்தியுள்ளார்கள். இந்த ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
2020-ஆம் ஆண்டு வரை ஜி ஸ்கொயர் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்தது. 2020 – 21 காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஜி ஸ்கொயர் விளம்பரங்கள் தான் உள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனம் ஊழலில் ஈடுபட்டுள்ளது குறித்தும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் இருவரும் ரூ.30 ஆயிரம் கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் பேசியிருந்தார். இந்த ஆடியோ தொடர்பாக மத்திய ஏஜென்சி மூலமாக விசாரிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்