எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் நடவடிக்கை இல்லை: எடப்பாடி
எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் 10 முறை கடிதம் கொடுத்தும் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 11) மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அனைவரையும் வெளியேற்ற ஆணை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ” எதிர்க்கட்சி துணை தலைவர் நியமனம் குறித்தும் அதிமுகவிலிருந்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கியது குறித்தும் சட்டப்பேரவை தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
எதிர்க்கட்சி துணை தலைவர் நியமனம் தொடர்பாகவும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி சாராதவர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் 10 முறை கடிதம் கொடுத்துள்ளோம். உயர்நீதிமன்ற தீர்ப்பு நகலையும் வழங்கியுள்ளோம். இதுகுறித்து சட்டமன்றத்தில் நான் இன்று பேசியபோது அனுமதிக்கவில்லை.
18 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சட்டமன்ற தலைவர், துணை தலைவர் பதவி கொடுக்கிறார்கள். நாங்கள் வைத்த கோரிக்கையை சட்டப்பேரவை தலைவர் நிராகரிக்கிறார்.
அவருடைய மரபை கடைபிடிக்கவில்லை. சட்டப்பேரவை தலைவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும் போது சட்டப்பேரவை தலைவரே பதில் சொல்கிறார். முதல்வரோ, அமைச்சரோ பதில் சொல்வதில்லை.
சட்டப்பேரவை தலைவர் தனது மரபை கடைபிடிக்கவில்லை. காலம் காலமாக எதிர்க்கட்சி தலைவர் பக்கத்தில் தான் எதிர்க்கட்சி துணை தலைவரை அமர வைப்பது மரபு. அந்த அடிப்படையில் தான் நாங்கள் கேட்டோம். அவையில் ஜனநாயகம் பின்பற்றப்படவில்லை.
டெல்டா மாவட்டத்தில் கண் துடைப்புக்காக திமுக போராட்டம் நடத்துகிறார்கள். விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இஸ்லாமிய கைதிகள் விடுதலை விவகாரம்: மஜக சட்டமன்ற முற்றுகை போராட்டம்!
“தஞ்சாவூர் வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்” – ஸ்டாலின் அறிவிப்பு!