பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுக தரப்பில் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று (அக்டோபர் 4) செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் 2.5 கோடி தொண்டர்களின் உணர்வுகளை தெரிவித்தார்கள். அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் என்டிஏ கூட்டணியிலிருந்து அதிமுக விலகிவிட்டது.
அதிமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்களில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம்.
இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். பாஜக தேசிய தலைவர்கள் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் தொண்டர்களை காயப்படுத்திவிட்டது. தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். பாஜக எங்களிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.
திமுக தலைவர் ஸ்டாலின் 10 சதவிகித தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 95 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பொய் சொல்கிறார். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மக்கள் அவதியடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்தது தொடர்பான கேள்விக்கு, “மத்திய அமைச்சர்கள் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது திமுக அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தமா? தென்னை விவசாயிகளின் நலன் கருதி நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கோவை நிகழ்ச்சியில் பங்கேற்ற போது தென்னை விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கலைஞர் வசனத்தை பேச மறுத்த ரஜினி
32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி – அமிதாப் கூட்டணி..!