சேலம் கொங்கணாபுரத்தில் இன்று (அக்டோபர் 22) நடந்த அதிமுகவின் ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இந்த கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அதில் அவர் பேசுகையில் “ இன்று ஆட்சியில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளார்கள். தமிழ்நாட்டில் 2026-இல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அவர்கள் அனைவரும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுவார்கள்” என்றார்.
சென்னையில் மழைநீர் வடிவதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பழனிசாமி கடந்த 15ஆம் தேதி கேட்டிருந்தார்.
அதற்குத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ள நீர் தேங்காமலிருந்ததே வெள்ளை அறிக்கைதான் என்று பதிலளித்திருந்தார்.
இதைப் பற்றி அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு “அதிமுக ஆட்சியில், சென்னையில் கனமழை பெய்த போது தேங்கிய வெள்ள நீர் வேகமாக வடிந்தது மற்றும் அகற்றப்பட்டது. ஆனால் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழக அரசாங்கத்தால் சிறு மழையையே தாக்குப்பிடிக்க முடியவில்லை. இன்னும் புயல் வரவில்லை
திமுக ஆட்சிக்கு வந்தபோது “ சென்னை மாநகரத்தில் ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்காதபடி நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். இந்த அரசு முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டத்தின் மிச்ச பகுதியைத்தான் நிறைவேற்றினார்கள்.
2022 மற்றும் 2023இல் கனமழை பெய்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என்று சொன்னார்கள். 98% மழைநீர் வடிகால் பணி முடிந்து விட்டதாகச் சொன்னார்கள். இந்தாண்டு மட்டும் தான் அப்படிச் சொல்லவில்லை.
ஏன் என்றால், இந்த ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை, வெள்ள தடுப்பு பணிகள் முடியவில்லை என்ற உண்மை மக்களுக்குத் தெரிந்துவிட்டது.
இதுவே அதிமுக ஆட்சியில் வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைவாகச் சரி செய்தோம். 2 லட்சம் டன் குப்பைகளை அகற்றினோம்” என்று பதிலளித்தார்.
திமுக கூட்டணி பற்றிய கேள்விக்கு “ திமுக கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்குமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தப்பட்டது தொடர்பாக அவர் பேசுகையில் “2021 , 2022, 2023 என தமிழகச் சட்டமன்றத்தில் நடந்த போக்குவரத்து மானியக் கோரிக்கைகளின் போது, ஒவ்வொரு முறையும் 5,000 பேருந்துகள் வாங்குவோம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
ஏற்கனவே தமிழக அரசிடம் உள்ள பல பேருந்துகள் பழுதடைந்ததால் தான், இப்போது தீபாவளிக்குத் தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்கள்”என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மும்பை கார் ஜிம்கானாவில் மத பிரச்சாரம்… கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் நீக்கம்!
ரூ.4,000 கோடி மதிப்பு தங்கம்… மருத்துவமனைக்கு கீழே பங்கரில் உள்ளதாக இஸ்ரேல் தகவல்
வக்ஃபு சட்டத்திருத்த மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழு விவாதத்தில் வாக்குவாதம்!